திருப்பூர்;வாக்காளர் பட்டியல் திருத்த பணியை வெளிப்படையாக நடத்தும் வகையில், அரசியல் கட்சிகளுடன் வாராந்திர கலந்தாய்வு நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து அரசுத்துறைகளும் நவீனமாகி வருகின்றன. இந்திய தேர்தல் கமிஷனும், வாக்காளர் தயாரிப்பு பணி, தேர்தல் பணி, ஓட்டு எண்ணிக்கை பணிகளை, ஒவ்வொரு தேர்தலிலும் மேம்படுத்தி வருகிறது.வெளிநாடுகளில் வசிப்போர், 'ஆன்லைன்' மூலம் ஓட்டுப்பதிவு செய்யும் வசதியை அமல்படுத்த, ஆயத்த பணி நடந்து வருகிறது. வரும், 2021 சட்டசபை தேர்தலுக்கு முன் நடக்கும், வாக்காளர் பட்டியல் திருத்த பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணியில், விண்ணப்ப படிவம் பெறுவது, பரிசீலனை என, அனைத்து பணிகளும் வெளிப்படையாக நடக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில், வாராந்தர கலந்தாய்வு நடத்த வேண்டுமென, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் கூறியதாவது:வரைவு பட்டியல் வெளியிடும் போது, அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து, சுருக்கமுறை திருத்த பணி நடக்கும். வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடும் நாளிலும், அரசியல் கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தி, பட்டியல் வெளியிடப்படும்.பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளின் போது, குற்றச்சாட்டை தவிர்க்கும் வகையில், வாராந்திர கலந்தாய்வு நடத்த இந்தாண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சியினரை அழைத்து, வாராவாரம் கலந்தாய்வு நடத்தி, அவர்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE