சேலம்: ''விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் மட்டும் உள்ளது,'' என, முன்னாள் எம்.பி., நரசிம்மன் குறறம்சாட்டினார்.
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், முன்னாள் எம்.பி.,யான நரசிம்மன், சேலத்தில், நேற்று நிருபர்களிடம் கூறியாதாவது: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களால், விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டர் என, பிரதமர் உறுதியளித்தார். இருப்பினும், போராட்டம் பெயரில், இடைத்தரகர்கள் பலரையும் அழைத்துவந்து, வாபஸ் பெற கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இருமடங்கு அதிகரிக்க, இடைத்தரகர்களை ஒழிக்க, விவசாயத்தை நவீனப்படுத்த, இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், அரசின் கொள்முதல் தொடர்ந்து நடக்கும். விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயத்தை வருமானமுள்ள தொழிலாக மாற்றத்தான், இந்த நடவடிக்கை. உண்மையான விவசாயி, மூன்று மாதங்களானாலும் போராட்டத்தில் இருப்போம் எனக்கூற முடியுமா? இடைத்தரகு மூலம், இதுவரை, பல கோடி ரூபாய் கொள்ளையடித்தவர்களால் பொறுக்க முடியவில்லை. இப்போராட்டத்தில் அரசியல் மட்டும்தான் உள்ளது. விவசாயிகள் இல்லை. சட்ட திருத்தத்துக்கு, அரசு உத்தரவாதம் கொடுக்கிறது. ஆனால், சட்டத்தையே வாபஸ் வாங்க வேண்டும் எனில், அது ஆபத்தான கோரிக்கை. ஒவ்வொன்றுக்கும், நாளை தீவிரவாதிகளின் பின்புலத்துடன் இதுபோன்ற எதிர்ப்பாக மாற வாய்ப்புள்ளது. சேலம் உருக்காலையை ஆய்வு செய்தோம். இதை, மத்திய அரசு தனியாருக்கு மாற்றுவதாக, தி.மு.க., அரசியல் செய்துகொண்டிருந்தது. அதுபோன்ற முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிறுவனம், லாபம் ஈட்டாமல் இருந்தால், புது தொழில்நுட்பத்தை புகுத்தி, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்பட, பா.ஜ., சார்பில் வலியுறுத்தியுள்ளோம். ரஜினி, தன் ஓட்டுகளை பிரித்துவிடுவார் என்ற அச்சத்தில் தி.மு.க., உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE