சேலம்: இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக, பார்வையாளர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த நவ., 16ல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, சுருக்கமுறை திருத்த பணி, இம்மாதம், 15 வரை நடக்கிறது. அதையொட்டி, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் தலைமை வகித்தார். அதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், இறந்த வாக்காளர் பெயர், பட்டியலில் இருப்பதை சுட்டிக்காட்டி, நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். டி.ஆர்.ஓ., திவாகர் உள்பட பலர் பங்கேற்றனர். பின், பார்வையாளர் வள்ளலார் கூறியதாவது: மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், தற்போது, 29 லட்சத்து, 61 ஆயிரத்து, 568 வாக்காளர் உள்ளனர். அத்தொகுதிகளின், 1,163 மையங்களில் உள்ள, 3,277 ஓட்டுச்சாவடிகளில், 3, 4வது சிறப்பு முகாம் நடக்கிறது. அதில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், தொகுதி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்வதோடு, சரிபார்ப்பு பணியும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
86,544 படிவங்கள்: வரைவு வாக்காளர் வெளியிடப்பட்டு, கடந்த, 11 வரை, பெறப்பட்ட படிவங்களின் விபரம்: மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதியில், பெயர் சேர்க்க, 52 ஆயிரத்து, 136; நீக்கம் செய்ய, 20 ஆயிரத்து, 972; திருத்தம் செய்ய, 9,346; தொகுதி மாற்றம் செய்ய, 4,089, வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் என, 86 ஆயிரத்து, 544 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. சிறப்பு முகாமை தொடர்ந்து, இம்மாதம், 15 வரை, படிவங்கள் பெறப்பட்டு, பின், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முடுக்கி விடப்படும் என, அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE