மாரண்டஹள்ளி: ''ரஜினி உள்ளிட்ட, யார் கட்சி துவங்கினாலும், தி.மு.க., கூட்டணிக்கு பாதிப்பு இல்லை,'' என, கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.
தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை காலதாமதம் செய்து வரும், தமிழக அரசை கண்டித்து, தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில், நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, ஈஸ்வரன் பின்னர், நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: தர்மபுரியில், இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த விழாவில், 'தென்பெண்ணை ஆற்றிலிருந்து மாரண்டஅள்ளி அருகே உள்ள தூள்செட்டி ஏரிக்கு, தண்ணீர் கொண்டு வரப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டும், இதுவரை பணிகள் செய்யவில்லை. 'நிவர்' மற்றும் 'புரெவி' புயலில் பாதித்த, ஒரு சில பகுதிகளில், மக்களுக்கு இதுவரை நிவாரண பொருட்கள் சென்றடையாமல் உள்ளதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ரஜினி கட்சி ஆரம்பித்து, அதற்கு பெயர் வைத்து, முழுமையான கட்டமைப்புக்கு கொண்டு வந்த பின்பே, அது குறித்து கருத்து கூற முடியும். தமிழகத்தில் புதியதாக யார் கட்சி துவங்கினாலும், எங்கள் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. எங்களுடைய, தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளதால், வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, ஈஸ்வரன் உட்பட, அவரது கட்சியினர், 100 பேரை, மாரண்டஅள்ளி போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE