தொப்பூர்: தொப்பூர் மலைப்பாதையில், 12 கார்கள் உட்பட, 16 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த வாகனங்கள் மீது, சிமென்ட் லாரி மோதியதில், காரில் வந்த மூவர் உட்பட நான்கு பேர் பலியாகினர்.
தர்மபுரியிலிருந்து, இரும்பு பாரம் ஏற்றிய லாரி, தொப்பூர் மலைப்பாதை வழியாக, சேலம் நோக்கி சென்றது. பிற்பகல், 2:45 மணிக்கு, தொப்பூர் மலைப்பாதையில், போலீஸ் குடியிருப்பு அருகே இறக்கத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சோளத்தட்டை ஏற்றி வந்த, டாடா ஏஸ் சரக்கு வாகனம் லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இறக்கமான சாலை பகுதி என்பதால், விபத்துக்குள்ளா டாடா ஏஸ் வாகனம் மீது, வேகமாக வந்து கொண்டிருந்த, 12 கார்கள் மற்றும் ஒரு பைக் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. அப்போது, ஆந்திராவிலிருந்து சேலத்தை நோக்கி சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, மோதி நின்ற கார்களின் மீது மோதியது. இதில், ஒரு கியா மற்றும் ஒரு பொலிரோ கார்கள் முழுவதுமான நொறுங்கின. இதில், கியா காரில் வந்த கோவையை சேர்ந்த நித்தியானந்தம், 35, ?பொலிரோ காரில் சென்னையிலிருந்து திரும்பிய, சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் மதன்குமார், 42, அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்தி, 38, ?ஹோண்டோ பைக்கில் வந்த, பென்னாகரம் அருகே பெரும்பாலையை சேர்ந்த கண்ணன், 40, ஆகிய நான்கு பேர் பலியாகினர். சம்பவ இடத்துக்கு சென்ற, மாவட்ட கலெக்டர் கார்த்திகா, எஸ்.பி., பிரவேஸ்குமார், டி.எஸ்.பி., அண்ணாமலை ஆகியோர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். இந்த விபத்தால், அப்பகுதியில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆறு வழிச்சாலை அமையுமா? தர்மபுரி - நாமக்கல் ஆறு வழிச்சாலை அமைக்க, 110 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில், தர்மபுரி அடுத்த பாளையம்புதூர், சேலம் மாவட்டம், ஓமலூர் டோல்கெட்டுக்கள் உள்ளன. இந்த வழியாக நாள் ஒன்றுக்கு சராசரியாக, 20 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இரு டோல்கெட்டுக்களில் மட்டும், மாத வருவாய் சராசரியாக, 12 கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. இந்த சாலைக்கான திட்ட மதிப்பு, இந்த டோல்கெட்டுகள் மூலம், 10 மாதங்களில் கிடைக்கும் வருவாயாகும். ஆனாலும், இங்கு தொடர்ந்து, அதிகரித்து வரும் உயிர் பலியை தடுக்க, இந்த பணியை விரைந்து துவங்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக, வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE