ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை சாத்தானுடன் ஒப்பிட்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயங் மோகோயங்கிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.45 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. வைரசுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜோகன்னஸ்பர்கில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான மோகோயங் மோகோயங் 59 நேற்று முன்தினம் உரை நிகழ்த்தினார்;

அப்போது அவர் பேசியதாவது: தடுப்பூசிகளை கடவுளாக நான் பார்க்கவில்லை. சாத்தானாகவே பார்க்கிறேன். தடுப்பூசி செலுத்தப்பட்டால் மக்களின் மரபணுக்கள் சீர்குலைந்துவிடும். எனவே அத்தகைய தடுப்பூசிகளை கடவுள் அழித்துவிடவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை நீதிபதி பேசும் இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவரது இந்த கருத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விட்ஸ் பல்கலைக்கழகத்தின் நச்சுயிரியல் பேராசிரியர் பேர்ரி ஸ்கவுப் கூறுகையில், “ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவர் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது துரதிஷ்டவசமானது” என்றார். எனினும் தலைமை நீதிபதி மோகோயங் மோகோயங் தன் கருத்தில் இருந்து பின்வாங்க மறுத்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE