ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் மார்கழி உற்ஸவத்தை கோயில் வளாகத்திற்குள் நடத்த அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது பக்தர்களை மனவேதனையடைய செய்துள்ளது.
இக்கோயிலில் மார்கழி மாதம் பகல்பத்து, ராப்பத்து, சொர்க்கவாசல் திறப்பு, எண்ணெய்காப்பு உற்ஸவம் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். கொரோனா காரணமாக இவ்விழாக்களை கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி நடத்த அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதில் டிச.25 அன்று நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு போது ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், பெரியாழ்வார் வீதிசுற்றி பகல்பத்து மண்டபத்திற்கு வராமல் ஆண்டாள் சன்னிதிக்கு திரும்பவும்,எண்ணெய்காப்பு உற்ஸவத்தை திருமுக்குளத்தில் வைத்து நடத்தாமல் பகல்பத்து மண்டபத்தில் பக்தர்களின்றி நடத்தவும் அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
கொரோனா பரவல் குறையத்துவங்கி பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்து வரும்நிலையில் மார்கழி உற்ஸவத்தை வழக்கம்போல் நடத்த அறநிலையத்துறை முன்வராதது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தி , மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல் நடத்துங்க...ஜீயர்
சடகோபராமானுஜ ஜீயர் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதியளித்து தீர்த்தம் மற்றும் சடாரி ஆசீர்வாதம் வழங்கவேண்டும்.கோயில் தீர்த்தத்தால் நோய்கள் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியநிலையில் மார்கழி உற்ஸவங்களை வழக்கம்போல் நடத்தவேண்டும். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் எண்ணெய்காப்பு உற்ஸவத்தை வழக்கம்போல் ஆண்டாள் நீராடும் திருமுக்குளம் மண்டபத்தில் நடத்தவேண்டும். கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம் சடாரி ஆசீர்வாதம் வழங்கவேண்டும். வைகுண்ட ஏகாதாசியையும் வழக்கம்போல் நடத்தி பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கவேண்டும்.ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள 7 குளங்களை சீரமைக்க,உடனடியாக அரசு உத்தரவிடவேண்டும். இதுகுறித்து விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவோம். தாமதமானால் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து போராடுவோம்,என்றார். ஸ்ரீரங்கம் தலத்தார்கள் பத்ரிபராசாரபட்டர், பெரியநம்பி சுவாமிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் ஒருங்கிணைப்பாளர் சரவணகார்த்தியேன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE