தமிழகம் முழுதும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் வாகன சோதனை சாவடிகள் என 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுகட்டாக 34.83 லட்சம் ரூபாய் மற்றும் 117 பவுன் நகைகள் சிக்கின. பெண் அதிகாரி உட்பட பலரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தமிழக போக்குவரத்து துறையின் கீழ் 86 இடங்களில் ஆர்.டி.ஓ. அலுவலகமான வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதேபோல கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநில எல்லைகள் உள்பட 21 இடங்களில் வாகன சோதனைச் சாவடிகள் உள்ளன. வாகனங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இந்த அலுவலகங்கள் வாயிலாகவே மேற் கொள்ளப்படுகின்றன.தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் உள்ளனவா; போதை பொருள் கடத்தப்படுகிறதா; அதிக பாரம் ஏற்றப் பட்டுள்ளதா என்பது குறித்து வாகன சோதனை சாவடிகளில் அதிகாரிகள் சோதனை செய்வர். விதிமீறல் இருந்தால் அபராதம் விதிப்பர்.
இந்த சோதனை சாவடிகள் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வசூல் வேட்டை நடப்பதாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ஒரே நாளில் அனைத்து சோதனை சாவடிகள் மற்றும் பல ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் சோதனை நடத்துமாறு போலீசாருக்கு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஜெயந்த் முரளி உத்தரவிட்டார்.இதையடுத்து ஒரு டி.எஸ்.பி., மற்றும் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் என 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் நேற்று காலையில் இருந்து இரவு வரை வாகன சோதனை சாவடிகளில் அதிரடி சோதனைநடத்தினர்.

* திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் 15 பேர் குழுவினர் நடத்திய சோதனையில் 72 ஆயிரத்து 750 ரூபாய் சிக்கியது
* சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை தமிழக - ஆந்திர மாநில எல்லையான திருத்தணியை அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் டி.எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி 43 ஆயிரத்து 410 ரூபாயை கைப்பற்றினர்
* நீலகிரி மாவட்டம் கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை தொரப்பள்ளி வாகன சோதனை சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் 34 ஆயிரத்து 700 ரூபாய் சிக்கியது
* தமிழக - கேரள எல்லையான கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனை சாவடியில் 50 ஆயிரத்து 200 ரூபாய் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது
* கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் 20 ஆயிரத்து 740 ரூபாய் கைப்பற்றப்பட்டது.
* தேனி -- கம்பம் மெயின்ரோட்டில் பழனிச்செட்டிபட்டி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் 5500 ரூபாய் சிக்கியது
* புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த ஒழுந்தியாப்பட்டு சோதனை சாவடியில் 16 ஆயிரம் ரூபாய் பறிமுதலானது
இதுபோல மொத்தம் 18 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 9 லட்சத்து 17 ஆயிரத்து 935 ரூபாய் சிக்கியது.
விருதுநகர் 'டாப்'
விருதுநகரை சேர்ந்த அருள்பிரசாத் என்பவர் மதுரை, விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் பெற்று அதிகாரிகளுக்கு பணம் அளிக்கும் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அருள்பிரசாத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.நேற்று விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் மோட்டார் இன்ஸ்பெக்டர் கலைசெல்வியும், கணவர் ராஜாவும் 2 நாள் விடுமுறைக்காக சொந்த ஊர் சேலம் செல்லவிருந்தனர்.

மதுரை வடக்கு வட்டார அலுவலகத்தில் பணிபுரியும் மோட்டார் இன்ஸ்பெக்டர் சண்முக ஆனந்த், கலைசெல்வியுடன் ஒரே ஆண்டியில் பணியில் சேர்ந்ததால் இருவரும் நண்பர்கள். மதுரையில் இருந்து விருதுநகர் வந்திருந்த சண்முக ஆனந்த் கலைசெல்வியின் மற்றொரு காரை எடுத்து கொண்டு சொந்த ஊரான நாமக்கல் செல்ல திட்டமிட்டார்.இவர்களை பார்க்க வந்த அருள்பிரசாத் அந்த வாரம் முழுவதும் முறைகேடு செய்து பெற்ற பணத்தின் அவரவர் பங்கை கொடுத்தார். விருதுநகரில் இருந்து மூவரும் புறப்பட்ட நிலையில் இருவரது காரையும், அருள்பிரசாத்தின் டூவீலரையும் சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடி அருகே வழிமறித்து சோதனையிட்டனர்.
இதில் கலைசெல்வி காரில் காரில் கணக்கில் வராத ரூ.24 லட்சம், 117 பவுன் நகை, சண்முக ஆனந்த் காரியில் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 880 லட்சம், அருள்பிரசாத்திடம் ரூ.7 ஆயிரமும் கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ.25 லட்சத்து 66 ஆயிரமும், 117 பவுன் நகையும் கைப்பற்றப்பட்டது.இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வருபவர்களிடம் அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு ஏற்கனவே வந்த புகார்களின் அடிப்படையில் நால்வரையும் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கருப்பையா தலைமையிலான போலீசார் விடிய விடிய விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் முழுதும் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 34.83 லட்சம் ரூபாய்; 117 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கலைச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகளிடம் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் நாகையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தனராஜ் வீடு மற்றும் அலுவலகத்தில் 63 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்றும் வேட்டை நடந்தது. சோதனை தொடரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்ததால் பல்வேறு துறை அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஒரே ஆண்டில் பணிக்கு வந்தவர்கள்
விருதுநகரில் சிக்கிய வாகன ஆய்வாளர்கள் கலைசெல்வி, சண்முக ஆனந்த் இருவரும் ஒரே ஆண்டில் பணிக்கு வந்தவர்கள். கலைசெல்வி விருதுநகருக்கு வந்து ஓராண்டு தான் ஆகிறது. திருச்சி துறையூரை சேர்ந்த சண்முக ஆனந்த் ஈரோட்டில் இருந்து மதுரை வடக்கு வட்டார அலுவலகத்திற்கு வந்து 10 நாட்கள் தான் ஆகிறது.
- நமது நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE