வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதரவாளர்களை திரட்டிவருகிறது. இந்தியாவிடமிருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரிக்க காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் முயன்று வருகின்றனர். சீக்கிய பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆபத்தான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்று.
அவ்வப்போது குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் இந்த பயங்கரவாதிகள், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் சீக்கியர்களில் ஆதரவாளர்களைத் திரட்டி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் குரூபட்வாண்ட் சிங்க் பானூன் என்ற சீக்கியர் இந்திய அரசால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டார்.இவர், இந்தியாவின் பிடியில் இருந்து விடுதலையாக வேண்டும் என காலிஸ்தான் ஆதரவாளர்களும், விவசாயிகளும் விரும்புகின்றனர் எனக்கூறியுள்ளார்.
விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில், காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவ திட்டமிட்டதாக தகவல் வெளியானது. விவசாயிகள் நலன் என்ற போர்வையில், பொய் சொல்லி, தங்களது சுயலாபத்திற்காக அவர்கள் ஊடுருவ திட்டமிட்டது தெரியவந்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் தூண்டி விடுவதாக, காங்கிரஸ் எம்.பி., ரவ்னீத் சிங் பிட்டு கூறியுள்ளார். முன்னாள் பாரத பிரதமர் இந்திரா படுகொலையில் மூளையாக செயல்பட்ட காலிஸ்தான் அமைப்பு தொடர்ந்து காங்கிரஸ் கட்சிமீது வெறுப்பை உமிழ்ந்துவருகிறது.
இதனை அடுத்து குரூபட்வாண்ட் சிங்க் பானூன் தலைமையிலான ஓர் காலிஸ்தான் குழு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை அவமதிக்க திட்டமிட்டது.சமீபத்தில் டில்லியில் பார்லிமென்ட் அருகே சீக்கிய விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாய மசோதாவுக்கு எதிராக நடந்த இந்த போராட்டத்திற்கு காலிஸ்தான் ஆதரவு அளிப்பது போன்று தற்போது நாடகமாடி வருகிறது. இதன்மூலம் உலகெங்கும் வாழும் சீக்கியர்களின் ஆதரவைப் பெற இந்த அமைப்பு முயன்று வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையில், காலிஸ்தான் அமைப்பினர் தங்களது கொடியை வைத்து விட்டு சென்றனர். முகம் மற்றும் தலையை மறைத்து, கொடியை வைத்து சென்றனர்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், நேற்று(டிச.,12) மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் அமைப்பினர் அவமதித்துள்ளனர்.
உலகளவில் அமைதி மற்றும் நீதிக்கான சின்னமாக விளங்கும் தலைவரை, அவமதித்தது கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக அமெரிக்க சட்ட அமைப்புகளிடம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE