மதுரை : நடிகர் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை மதுரையில் இன்று(டிச., 13) துவங்கி உள்ளார். இதற்காக அவர் மதுரை வந்துள்ளதால் டுவிட்டரில் #மதுரையில்_ஆண்டவர் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசனும், அவரது கட்சியும் தயாராகி வருகிறது. வேட்பாளர் தேர்வு, கூட்டணி தொடர்பான பேச்சுக்கள், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் முதற்கட்டமாக இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை கமல் ஆரம்பிக்கிறார். 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் கமல் தொடங்கும் பிரச்சாரம், 13-ம் தேதியான இன்று மதுரையில் தொடங்கி தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 16-ம் தேதி வரை நடக்கிறது.
மதுரை செல்ல சென்னை விமான நிலையம் வந்த கமல், செய்தியாளர்களிடம் பேசியபோது, ''எங்கள் பிரச்சாரம் துவங்கி விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் செயல்பட வேண்டிய முறையில் செயல்படுவோம் பல இடங்களில் அனுமதி கொடுத்திருக்கிறார்கள், நகரங்களுக்குள் எங்களுக்கு அனுமதி கடைசி நிமிடத்தில் மறுத்து இருக்கின்றார்கள், பார்ப்போம். தமிழகம் தற்போது சீரழிக்கப்பட்டு விட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனவே சீர்திருத்தப்பட்ட புதிய தமிழகத்தை உருவாக்குவதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம் என்றார்.

மதுரை வருகை தந்த கமல்ஹாசனை நேரில் வரவேற்கும் முன்பே டுவிட்டரில் வரவேற்க துவங்கி விட்டனர். தொடர்ந்து அவர் வருகைக்கு பின் அவரின் போட்டோக்களைப பதிவிட்டும், வாழ்த்து சொல்லியும் கருத்து பதிவிட்டனர்.
''தமிழ் மண்ணின் மைந்தன் கமல்ஹாசன், இனி எதுவும் தடையில்லை. 2021 நமதே, தமிழகத்தின் தலைவர் கமல்ஹாசன்.'' ''தமிழகத்தை சீரமைக்கும் பணியின் முதல் அடியை மதுரையில் தொடங்கினார் நம்மவர்''. ''சீரமைப்போம்_தமிழகத்தை என்பதுடன் சீரமைப்போம்_இந்தியாவை என்று மாறப்போகிறது''. ''மய்யம் வெல்லும், மதுரையில்_ஆண்டவர், சீரமைப்போம்_தமிழகத்தை மக்கள் ஆட்சி செய்யும் மக்கள் நீதி மய்யம்'' என பலரும் கமலை வரவேற்று சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #மதுரையில்_ஆண்டவர் என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. அதன் உடன் அவர் பிரச்சாரத்தில் முன்னெடுத்துள்ள சீரமைப்போம்_தமிழகத்தை என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE