சென்னை : சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம், முழு தோல்வியை அடைந்த நிலையில், மூன்றாவது முழுமை திட்டமாவது, நகரின் தேவைகளை பூர்த்தி செய்யுமா என, நகரமைப்பு வல்லுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., 1972ல் நிறுவப்பட்டது. இதன் வாயிலாக, 1975ல் முதலாவது முழுமை திட்டம் உருவாக்கப்பட்டது. நகர, ஊரமைப்பு சட்ட விதிகளின்படி, முதலாவது முழுமை திட்டம், 1995ல் காலாவதியானது. நீண்ட கால தாமதத்திற்கு பின், 2008ல் இரண்டாவது முழுமை திட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னை பெருநகரில், 2026 வரையிலான வளர்ச்சியை கருத்தில் வைத்து, இது உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஐந்து கமிட்டிகள் எங்கே?
போக்குவரத்து, உள்கட்டமைப்பு, நில பயன்பாடு,- சுற்றுச்சூழல், உறைவிடம், பொருளாதாரம்,- வேலைவாய்ப்பு ஆகிய தலைப்புகளில் புதிய திட்டங்களை பரிந்துரைக்க, தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் இதுவரை ஒருமுறை கூட கூடியதாகவோ, பரிந்துரைகள் வழங்கியதாகவோ தெரியவில்லை. சென்னை பெருநகரில், 2026 வரையிலான காலத்தில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து, அடிப்படை வசதிகள், துணை நகரங்கள் ஆகியவற்றுக்காக பல்வேறு திட்டங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த திட்டங்களில், 10 சதவீதம் மட்டுமே நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகரில், 2011ல், 88.71 லட்சமாக இருந்த மக்கள் தொகை, 2026ல், 1.25 கோடியாக அதிகரிக்கும் என, இரண்டாவது முழுமை திட்டத்தில் மதிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில், போக்குவரத்து மேம்பாட்டு பணிகளுக்கு, 47 ஆயிரத்து, 811 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், இரண்டாவது முழுமை திட்டத்தில் குறிப்பிடப்பட்டன. இதை சம்பந்தப்பட்ட துறைகள் கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டதே, இரண்டாவது முழுமை திட்டத்தின் தோல்வியாக பார்க்கப்படுகிறது.
முழுமை திட்ட தோல்வி ஏன்?
இதுகுறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்க தலைவர் கே.எம்.சதானந்த் கூறியதாவது: இரண்டாவது முழுமை திட்டம், முழு தோல்வியை அடைந்துள்ளது. நகரமைப்பு பணியில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம், திறன் மற்றும் தொலைநோக்கு இல்லாததே, இதற்கு பிரதான காரணம். கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதை மட்டுமே பணியாக நினைக்கும் அதிகாரிகளை வைத்துக் கொண்டு, முழுமை திட்டத்தை செயல்படுத்த முடியாது.
இந்நிலையில், தற்போது மூன்றாவது முழுமை திட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதில், உலக வங்கி அழுத்தத்தின் அடிப்படையில், கலந்தாலோசகர் தேர்வு செய்யப்பட உள்ளார். சென்னைக்கான தொலைநோக்கு, ஆவணம் தயாரிக்க, தனியார் கலந்தாலோசகரை தேடும், சி.எம்.டி.ஏ., இதில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்ய மறுக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில், மேற்கொள்ளப்பட்ட, 74வது திருத்தத்தின்படி, மக்கள் பங்களிப்பை நகர்ப்புற திட்டமிடலில் உறுதி செய்ய வேண்டும்.
மக்களின் சமூக பொருளாதார செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில், மூன்றாவது முழுமை திட்டம் இருக்க வேண்டும். முழுமை திட்டத்தை தயாரிப்பது, அறிவிப்பதுடன் நிற்காமல், அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
சென்னையின் புவியியல் அமைப்பு, மக்களின் தேவை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாக மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
2046ல் தேவைகள் என்ன?
சென்னை பெருநகரில், 2026 - - 2046 வரையிலான மூன்றாவது முழுமை திட்டம் தொடர்பாக மக்களின் எதிர்பார்ப்புகள்:
நில வகைபாடு தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்; நில பயன்பாட்டு கட்டுப்பாடுகள் துல்லியமாக இருக்க வேண்டும்
அனைத்து தரப்பு மக்களுக்கும் உறைவிடம், குடிநீர், சாலை வசதிகள் கிடைக்கும் வகையில், திட்டமிடல் இருக்க வேண்டும்
அதீத மழை பெய்யும் சமயங்களில், வெள்ள நீர் வடிவதற்கு அறிவியல் பூர்வமாக வடிகால்களை திட்டமிட வேண்டும்
நீர் நிலைகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்கள் தேவை உள்ளாட்சிகள் நிலையில் காணப்படும் வேறுபாடு களையப்பட்டு, நகர்ப்புற அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்
பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்த வழி செய்ய வேண்டும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெருநகர் பகுதிக்குள் வர வேண்டும்மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை மூன்றாவது முழுமை திட்டம் பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரூ.47,811 கோடி திட்டங்கள் எங்கே?
இரண்டாவது முழுமை திட்ட பரிந்துரைத்த, போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களின் மதிப்பு விபரம்:திட்டம் / மதிப்பு ரூ. கோடியில் புறநகர் ரயில் திட்ட மேம்பாடு / 1,126 பேருந்து போக்குவரத்து மேம்பாடு / 1,861 சாலை வசதி மேம்பாடு / 14,918 நடைபாதை மேம்பாடு / 209 வாகன நிறுத்துமிட மேம்பாடு / 92 துறைமுக மேம்பாடு / 26,918 விமான நிலைய மேம்பாடு / 2,000 தகவல் தொகுப்பு, காற்று தரம் மேம்பாடு / 11மொத்தம் / 47,811
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE