ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதியை நிலைநாட்டுமா?

Added : டிச 14, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
தமிழகத்தில், ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. தற்போது, இந்த கணக்கெடுப்பு தொடர்பான புள்ளி விபரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில், பிரத்யேக ஆணையத்தை, முதல்வர் இ.பி.எஸ்., அமைத்துள்ளார். அரசியல் ரீதியான கடும் நிர்பந்தம்

தமிழகத்தில், ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

தற்போது, இந்த கணக்கெடுப்பு தொடர்பான புள்ளி விபரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில், பிரத்யேக ஆணையத்தை, முதல்வர் இ.பி.எஸ்., அமைத்துள்ளார். அரசியல் ரீதியான கடும் நிர்பந்தம் காரணமாக, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஆனாலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, முதல்வரின் அறிவிப்பு காலம் கடத்தும் செயல் எனக் கூறி, வன்னியர்களுக்கு, 20 சதவீத இடஒதுக்கீட்டை உடனே அளிக்க வேண்டும் என, வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், இட ஒதுக்கீடு அளவை இறுதி செய்ய, ஜாதி வாரியான சரியான புள்ளி விபரங்களை சமர்ப்பிக்கும்படி, மாநில அரசுகளை, உச்ச நீதிமன்றமும் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர முடியும் என, நம்பப்படுகிறது.

நம் நாட்டில், 1901ம் ஆண்டு முதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதில், 1931ம் ஆண்டு வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பால், பல பாதகமான விளைவுகள் ஏற்படுவதாக, சுதந்திர போராட்ட காலத்தில், காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, 1941 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஜாதிவாரியான கணக்கெடுப்பு ரத்தானது.

இதன்பின், 2011ல், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சமூக, பொருளாதார மற்றும் ஜாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனாலும், அப்போது திரட்டப்பட்ட விபரங்கள், அரசியல் காரணங்களால் வெளியிடப்படவில்லை.அரசியலில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தும் ஜாதிகளை சேர்ந்த தலைவர்கள், தங்கள் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அதிக அளவில் இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்டு போராடுவது, நம் மாநிலத்தில் மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா உட்பட பல மாநிலங்களில் நடந்துள்ளது.

கடந்த, 80ம் ஆண்டுகளில், முதல்வராக எம்.ஜி.ஆர்., பதவி வகித்த போது, வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, 20 சதவீதம்இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி, பா.ம.க., பெரிய அளவில் போராட்டம் நடத்தியது. இதன்பின் தான், சில ஜாதிகளைச் சேர்ந்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக இனம் கண்டறியப்பட்டு, 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.அந்த இட ஒதுக்கீட்டில், பல ஜாதிகள் சேர்க்கப்பட்டதால், தங்களுக்கு பலன் கிடைக்கவில்லை.

வன்னியர்களுக்கு தனியாக, 20 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என, தற்போது பா.ம.க., போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.ஜாதிவாரியாக விரிவான கணக்கெடுப்பு நடத்துவதன் வாயிலாக, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதியினரின் சமூக, பொருளாதார நிலவரங்களை அறியலாம். அதனடிப்படையில், மிகவும் பின்தங்கிய பிரிவினர் முன்னேற்றத்திற்கான நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தலாம்.மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்கும் போது, பகிரங்கமான போட்டி தேர்வுகள் வாயிலாக, குறிப்பிட்ட பிரிவினர் மட்டும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முக்கியத்துவம் பெறுவதை தவிர்க்க முடியும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள குலசேகரன் ஆணையமானது, ஜாதிவாரியான புள்ளி விபரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய விபரங்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அதன் பிறகே மேல் நடவடிக்கைகள் துவங்கும். அதனால் தான், இந்த ஆணையத்தால், வன்னிய சமூகத்தினருக்கு உடனடி பலன் கிடைக்காது எனவும், தனி இடஒதுக்கீடு வழங்கும் ஆணையை உடனே பிறப்பிக்க வேண்டும் எனவும், பா.ம.க., வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் ஜாதி பாகுபாடு என்பது, நெடுங்காலமாக தொடர்கிறது. அப்படிப்பட்ட சூழலில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால், ஜாதிய ரீதியான பிரச்னைகள் தொடரும். தமிழகத்தில் அதிக அளவில் வசிக்கும் ஜாதியினருக்கு, அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தரலாம். ஓட்டு வங்கி அரசியலுக்காக, அவர்களை கவரும் வேலைகளில் ஈடுபடலாம். சிறுபான்மையாக உள்ள ஜாதிகள் ஓரங்கப்படலாம் என்பது, சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.

ஆனால், ஜாதி ரீதியாக இடஒதுக்கீடு வழங்கினால் தான், சமூக நீதி பாதுகாக்கப்படும் என்பது மற்றொரு தரப்பினரின் பலமான வாதம். இருந்தாலும், பாகுபாடு இல்லாத, அனைத்து ஜாதியினரும் அவர்களுக்கான சமூக நீதியை பெறுவதை உறுதி செய்வதே, அரசின் லட்சியமாக இருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
லிங்கம்,சென்னை ஜாதி கணக்கெடுக்கும் பட்சத்தில்...அதோடுகூட மதக் கணக்கையும் கண்டிப்பாக எடுக்க வேண்டும்...அப்பொழுதுதான் இந்துக்களின் வலிமை என்ன என்று தெரியும்...!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X