'மக்கள், ஜாதி, மதம், கட்சி, கொள்கை ரீதியாக பிரிந்துள்ளனர். நீங்கள் சொல்லிய உடன், ஓட்டை மாற்றியா போட்டு விடப் போகின்றனர்...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேட்டி: சமயக்குறவர்களில் முதன்மையானவரான ஞானசம்பந்தர் பற்றி அவதுாறு பேசிய திருமாவளவன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஹிந்து பெண்களை இழிவுபடுத்தி பேசிய திருமாவளவனோடு கூட்டணி வைக்கும் அத்தனை கட்சிகளும் ஹிந்து விரோத கட்சிகள். அந்தக் கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என வீடு வீடாக பிரசாரம் செய்வேன்.
'உங்கள் மீது மட்டுமா போட்டார்; பத்திரிகைகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் மீதும் போட்டார்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி அறிக்கை: 1995ல், அப்போதைய முதல்வராக இருந்த, ஜெ., என் மீது அனைத்து மாவட்டங்களிலும், 100 வழக்குகளை தொடர்ந்தார். அவற்றில் ஒன்று, 'தடா' வழக்கு. அவற்றை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி அஹமதி, 100 ரூபாய் பத்திரம் எழுதிக் கேட்டு, அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தார்.
'பெரு முதலாளிகள், சிறு முதலாளிகள், தொழிலாளிகள் என, பலதரப்பட்டவர்கள் சேர்ந்தது தான் நாடு...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை: 'பிக்கி' எனும் பெரு முதலாளிகளின் சங்கம் விவசாய சட்டங்களை வாபஸ் பெறக் கூடாது என்று அரசை வலியுறுத்தியுள்ளது. இதிலிருந்தே அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கானது அல்ல; பெரு முதலாளிகளுக்கானது என்பதை உணரலாம்.
'அவரின், 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கை, சட்டசபை தேர்தலுக்கானது என, பிற கட்சிகள் கூறுவது, உங்களுக்கு தெரியாதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்கும், பா.ம.க., தலைவர் ராமதாஸ், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன்?
'எம்.பி.,க்கள் கூட்டுக் கூட்டத்தை கூட்டுவதற்காக; எம்.பி.,க்கள், பத்திரிகையாளர்கள் வசதியாக உட்காருவதற்காக...' என, பதிலளிக்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன் அறிக்கை: சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போயினர். மக்களைக் காக்கத் தான் இந்தச் சுவர் என்றனர் மன்னர்கள். அதுபோல, கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து, பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பார்லிமென்ட் கட்டுவது யாரைக் காக்க?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE