அன்னுார்:அன்னுாரில், மூன்று கோடி மதிப்பில் நவீன மின் மயானம் அமைக்கும் பணிக்கு, மேலும், 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்னுார் தாலுகாவில் மின்மயானம் இல்லை. எனவே, அன்னுார் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் இறுதி சடங்கு செய்ய, ஈரோடு மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி, மின் மயானத்துக்கும், அன்னுாரின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள், சரவணம்பட்டி மின் மயானத்துக்கும் செல்கின்றனர்.
அன்னுாரில் நவீன மின்மயானம் அமைக்க, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர். இதற்காக, அன்னுார் லயன்ஸ் கிளப் மற்றும் பொது மக்கள் சார்பில், ஒரு கோடியே 50 லட்சம் திரட்டப்பட்டு, அரசிடம் செலுத்தப்பட்டது.அரசு தன்னிறைவு திட்டத்தில், ஒரு கோடியே 50 லட்சம் ஒதுக்கியது. இதையடுத்து, மூன்று கோடி மதிப்பில், மின்மயானம் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
ஆனால், குமாரபாளையம், ஒட்டர்பாளையம், குப்பனூர், என பல ஊர்களில் மின்மயானம் அமைக்க இடம் தேர்வு செய்தும், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு காரணமாக, எட்டு ஆண்டுகளாக பணி துவங்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், அன்னுாரில் உள்ள, 119 ஏக்கர் குளத்தின் தென்மேற்கு பகுதியில், ஏற்கனவே பொது மயானம் உள்ள மேடான இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. பொதுப்பணித் துறையும் ஆட்சேபனை இல்லை என சான்றளித்தது.
இதையடுத்து, பணி உத்தரவு வழங்கப்பட்டு, கடந்த ஜூனில் பணி துவங்கியது. மூன்று கோடி ரூபாயில், 2 தகன மேடைகளுடன், நவீன முறையில் மின்மயானம் அமைக்கப்பட்டு வருகிறது.குளத்துக்கு அத்திக்கடவு திட்டத்தில் நீர் வரும் சமயத்தில், மின்மயானத்துக்குள் நீர் புகும் வாய்ப்பு உள்ளதால், மின் மயானத்தை சுற்றி, 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச்சுவர் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கான நிதி இல்லை.
எனவே, பொதுமக்கள் சார்பில், சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சபாநாயகர் தனபால் பரிந்துரையின் பேரில், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில், 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி கூறுகையில், ''200 மீ., நீளத்துக்கு, 7 மீ., உயரத்துக்கு, இந்த தடுப்பு சுவர் அமைய உள்ளது. இதனால் குளம் முழுவதும் நீர் நிரம்பினாலும், மின் மயானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மயான கட்டுமானப் பணி, மார்ச் மாதம் முடிவடையும்,'' என்றார்.இனிமேல் இறுதிச்சடங்கு செய்ய, 20 கி.மீ., தூரம் செல்ல தேவை இல்லாததாலும், பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுவதாலும், அன்னுார் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE