பொள்ளாச்சி:பயறு வகை பயிர்களில் உற்பத்தி மற்றும் மகசூலை அதிகரிக்க, வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில், மானாவாரி, பாசனப்பயிர் மற்றும் தென்னையில் ஊடுபயிராக பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பயறு வகைப் பயிர்களை விதைக்கும் பருவத்தில் இருந்து கவனம் செலுத்தினால், மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.பயறு வகை பயிர்களில், விதையின் தரமே மகசூலின் அளவுக்கு முக்கிய காரணியாக உள்ளது. விதையின் முக்கியத்துவத்தை விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில், கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.விதை நேர்த்திபயறு வகை விதைகள் கட்டாயம் விதைச் சான்று பெற்ற தரமான விதைகளாக இருக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு, 5 மி.லி., 'இமிடாகுளோபிரிட்' கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தால், பல்வேறு நோய், பூச்சி பாதிப்புகளை தவிர்க்கலாம். பயிர் வளர்ச்சியின் போது, அதிகம் செலவு செய்து பூச்சிக்கொல்லி தெளிப்பதை தவிர்க்க முடியும்.பாசன மேலாண்மைவிதைப்பு செய்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். அதன்பின், மூன்றாம் நாள் உயிர் நீர் அளிக்க வேண்டும். பிறகு, மண்ணின் தன்மைக்கு ஏற்ப, நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும், ஈரப்பதம் பேணும் வகையில் நீர்பாய்ச்ச வேண்டும். களை கட்டுப்பாட்டுக்கு, 15 நாளில் ஒருமுறையும், அடுத்த 15 நாளில் மற்றொரு முறையும் களையெடுக்கவேண்டும்.பயிர் ஊக்கிபயறுவகைச் செடிகளில் பூக்கள் அதிகம் உதிர்ந்துவிடும். இதனால், உற்பத்தி குறைவு ஏற்படும். இதை தவிர்க்க பூவெடுக்கும் தருணத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில், 4 மி.லி., அளவில் 'பிளோனோபிக்ஸ்' பயிர் வளர்ச்சி ஊக்கியை, செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். இந்த முறைகளை கையாண்டால், பயறு வகை பயிர்களில் நல்ல மகசூலை எதிர்பார்க்கலாம். இவ்வாறு, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE