பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கோர்ட் வளாகத்தில் நடந்த, லோக்அதாலத் விசாரணையில், 338 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, இழப்பீடாக, 1.51 கோடி இழப்பீடு வழங்க உத்தரவானது.பொள்ளாச்சி சப் - கோர்ட்டில், நிலுவை வழக்குகள் மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் லோக்அதாலத் விசாரணை நடந்தது.விசாரணை மன்றத்துக்கு, கோவை மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி சப் - கோர்ட் நீதிபதி கிருஷ்ணபிரியா, மாஜிஸ்திரேட்டுகள் தங்கமணிகணேஷ், செல்லையா மற்றும் அரசு வக்கீல் சம்பத்குமார் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக பங்கேற்றனர்.மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கேட்பு வழக்குகள், வாரிசு உரிமை வழக்குகள், பண பரிவர்த்தனை, செக்மோசடி வழக்குகள் மற்றும் சமரசத்துக்கு உட்பட்ட குற்ற வழக்குகள் என, 454 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 309 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. தவிர, வாரிசு உரிமை, செக்மோசடி மற்றும் சமரசத்துக்கு உட்பட்ட குற்ற வழக்குகள் என, 29 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. லோக்அதாலத்தில், மொத்தம், 338 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. தீர்வு தொகையாக, ஒரு கோடியே, 51 லட்சத்து, 13 ஆயிரத்து 670 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவானது.வால்பாறைவால்பாறை கோர்ட் வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. சட்டப்பணிகள் குழு தலைவர், மாஜிஸ்திரேட் கவிதா தலைமை வகித்தார். இதில், செக்மோசடி வழக்குகள், பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், வாகன வழக்குகள் உட்பட, 104 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.அபராத தொகையாக, 45 ஆயிரம் ரூபாய்; காசோலை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகளில், 13 லட்சத்து, 17 ஆயிரத்து, 280 ரூபாய் வசூலிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வக்கீல்கள் முத்துசாமி, பால்பாண்டி, பெருமாள் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE