உடுமலை:உடுமலையில், சுற்றுலாத்தலமான அமராவதி அணை திறக்கப்பட்ட நிலையில், திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணையில், அணைப்பூங்கா, படகு சவாரி, வனத்துறை முதலைப்பண்ணை மற்றும் மலைவாழ் மக்கள் சுற்றுச்சூழல் விற்பனையகம் மற்றும் சின்னாறு வனச்சுற்றுலா ஆகியவை உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, 9 மாத இடைவெளிக்கு பின், அமராவதி அணைப்பூங்கா நேற்று திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழையால் அணை நிரம்பி காணப்படுவதோடு, அணைப்பூங்காவிலும் பசுமை திரும்பியுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.அதே போல், திருமூர்த்திமலைப்பகுதியும் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. மலையடிவாரத்தில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும், மலைமேல், 960 மீட்டர் உயரத்தில், மூலிகை குணங்களுடன் கூடிய பஞ்சலிங்கம் அருவி உள்ளது. மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், வண்ண மீன் பூங்கா, திருமூர்த்தி அணை என, சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது. மலைவாழ் மக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை கடைகளும் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, திருமூர்த்திமலை, அமராவதி என இரு சுற்றுலாத்தலங்களுக்கும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.கொரோனா ஊரடங்கில், வழிகாட்டுதல் வழங்கி, நேற்று முதல், சுற்றுலா மையங்கள் திறக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அமராவதி அணை திறக்கப்பட்ட நிலையில், திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு நேற்று சுற்றுலா பயணிகள் அனுமதிக்கவில்லை. இதனால், குழப்பம் நீடித்து வருகிறது.
பருவமழை பெய்து, பஞ்சலிங்கம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், அனுமதி மறுப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கோவில் அலுவலர்கள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகத்திடமிருந்து முறையான அறிவிப்பு வரவில்லை; உரிய ஆலோசனை பெற்று திறக்கப்படும்,' என்றனர்.
அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன், சுற்றுலா மையங்களை திறக்கவும், முழுமையாக செயல்படவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருமூர்த்தி அணையில், மலைவாழ் கிராம மக்களுக்கு வருவாயும், சுற்றுலா பயணிகளுக்கு, அதிக உற்சாகத்தையும் தந்த, படகு சவாரி பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. படகு சவாரியை துவங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE