''தமிழகத்தில், என் கட்சி போட்டியிடப் போவது உண்மை தான். ஆனால்,இன்னும் யாருடனும் கூட்டணி பேசவில்லை; எவ்வளவு தொகுதி என்றும் முடிவாகவில்லை. கூட்டணி வைக்க, தமிழக கட்சிகள் முன்வந்தால் சேர்க்கத் தயார்,'' என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
அகில இந்திய மஜ்லிஸ் - ஏ - இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி, 1944ல் துவக்கப்பட்டு, அசதுதீன் ஓவைசியின் தந்தை வழி தாத்தாவால், 1957ல் ஒருங்கிணைந்த ஆந்திராவின், ஹைதராபாதில் மறுசீரமைக்கப்பட்டது. அசதுதீன் தந்தை சுல்தான் சலாலுதீன் ஓவைசி, கட்சி சார்பில், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., பதவிகள் வகித்தார்.
அவரது மறைவுக்கு முன், அசதுதீன் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். அசதுதீன் தற்போது, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். இவரது தம்பி அக்பருதீன் ஓவைசி, தெலுங்கானா சட்டசபை எம்.எல்.ஏ.,வாக உள்ளார். கட்சியின் சட்டசபை தலைவராகவும் உள்ளார். அசதுதீன் தலையெடுத்த பின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி, இந்திய அளவில், பெரிய கட்சியாக உருவெடுத்து வருவதற்கான சான்றாக, மஹாராஷ்டிராவிலும், சமீபத்தில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலிலும், தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு, கணிசமான தொகுதிகள் மற்றும் ஓட்டுக்களைப் பெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த அசதுதீன், 2012ல், அதிலிருந்து வெளியேறி, தனியாக போட்டியிட துவங்கினார். அது, காங்கிரசிடமிருந்து முஸ்லிம் ஓட்டுக்களை பிரித்து, பா.ஜ.,வுக்கு சாதகத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலில், வாணியம்பாடி தொகுதியில் இக்கட்சி போட்டியிட்டது.
தற்போது, தமிழக அரசியல் நிலவரம், பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது.
பெரிய தலைவர்கள் இன்றி, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே போட்டி, ரஜினியின் வருகை, சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை, கமல் கட்சியின் தலையெடுப்பு, பா.ஜ.,வின் வளர்ச்சி ஆகியவை, வரும் ஏப்ரலில் நடக்க உள்ள, சட்டசபை தேர்தலுக்கு மிக வித்தியாசமான, புதுத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றன.
இதை நன்கு உணர்ந்துள்ள ஓவைசி, தமிழகத்தில் இம்முறை கால்பதித்து, குறைந்தபட்சம், 30 தொகுதிகளிலாவது போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம், திருச்சியில் நடந்த கட்சி கூட்டத்தில், இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.எனினும், முஸ்லிம் ஓட்டுகளை அதிகம் பெறும், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க, ஓவைசி முடிவு செய்துள்ளாரா என்பது குறித்தும், கமல் மற்றும் சீமான் ஆகியோருடன் கூட்டணி வைக்க, ஓவைசி தயாராகி விட்டாரா என்ற சந்தேகம் குறித்தும், தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளுக்கோ, 'மூன்றாம் கூட்டணி' என்ற அறிவித்துள்ள கமலுக்கோ, 'நாம் தமிழர்' என்ற கட்சி நடத்தும் சீமானுக்கோ தெரியவில்லை.
எனவே, தமிழகத்தில், ஓவைசியின் எதிர்கால திட்டம் என்ன என்பது குறித்து அறிய, அவரை போனில் தொடர்பு கொண்ட போது அவர், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
தமிழகத்தில் கூட்டணி அமைக்க, கமல் மற்றும் சீமான் ஆகியோருடன், நீங்கள் பேச்சு நடத்தியுள்ளதாக செய்தி வெளிவருகிறதே? கிடையாது; கிடையவே கிடையாது. யாருடனும் நான் பேசவில்லை; பேசியதாக, வேகமாக வதந்தி பரவி வருகிறது.
தனித்து போட்டியா, கூட்டணியா?
இந்த நிமிடம் வரை, எந்த தலைவருடனும் பேசவில்லை என்பதால், தனியாகத்தான் உள்ளோம். கூட்டணி உருவாக்க யாரும் வேண்டுகோள் விடுத்து முன்வந்தால், தாராளமாக சேர்த்துக் கொள்வேன்.'காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் சேர மாட்டோம்' என, திருச்சி கூட்டத்தில், தமிழக நிர்வாகிகள் கூறி உள்ளனரே?நான் அப்படி அவர்களுக்கு அறிவுறுத்தவில்லை. எல்லா கட்சிகளுக்கும், கதவுகள் திறந்தே இருக்கின்றன.
தி.மு.க.,வுடன்?அதான் சொன்னேனே... 'ஓபன்' என்று!
தமிழகத்தில், எவ்வளவு தொகுதிகளில், போட்டியிட முடிவு செய்துள்ளீர்கள்?
இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியின் தமிழக நிர்வாகிகளுடன் பேசி, கள நிலவரம் அறிந்த பின், தீர்க்கமாக முடிவு செய்து, களம் இறங்குவோம்.
கட்சியின் கணக்கு துவக்க வருகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கடந்த சட்டசபை தேர்தலின் போதே, வாணியம்பாடியில் நாங்கள் போட்டியிட்டதையும், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கூட்டணி குறித்து, எப்போது முடிவு செய்யப் போகிறீர்கள்?
இப்போது தானே, தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்குகிறது. தமிழக நிர்வாகிகளை அழைத்து பேசி, கூட்டணி, தொகுதிகள், வேட்பாளர் என, எல்லாவற்றையும் தீர்மானிக்க நேரம் இருக்கிறது; பிறகு சொல்கிறேன்!இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கும் ஓவைசி, நாட்டின் நெருக்கடியான நேரங்களில், இறையாண்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் என்ற வகையில், விருதுகள் வாங்கியுள்ளார். 'சிறந்த லோக்சபா உறுப்பினர்' என்றும், அனைத்து கட்சியினராலும் அழைக்கப்படுகிறார்.தமிழகத்தில் கூட்டணி அல்லாமல், தனியாகப் போட்டியிட ஓவைசி களம் இறங்கினால், மற்ற முஸ்லிம் கட்சிகளும், அமைப்புகளும், தி.மு.க.,வுடனோ, அ.தி.மு.க., வுடனோ கூட்டணி அமைக்க வேண்டி இருக்கும். முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த குரலாய் பார்லிமென்டில் ஒலிக்கும் ஓவைசியின் பக்கம், அனைத்து முஸ்லிம்களும் திரும்புவரா அல்லது தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவரா என்பதை, இத்தேர்தலில் பார்க்கலாம். 'விறுவிறு'வென சூடு பிடித்து, வித்தியாசமான சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகும் தமிழக களத்தை, ஓவைசியின் வருகை மேலும் மெருகூட்டும் என எதிர்பார்க்கலாம்!- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE