வாஷிங்டன் : “அமெரிக்காவில், அடுத்த ஆறு மாதங்களில், கொரோனா வைரசால், கூடுதலாக இரண்டு லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது,” என, 'மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில், கொரோனா வைரசால், 1.63 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை, மூன்று லட்சத்தை கடந்துள்ளது. இதற்கிடையே, தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றை வினியோகிப்பதற்கு, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மிலிண்டா கேட்ஸ் இணைந்து நிர்வகிக்கும் அறக்கட்டளை, 735 கோடி ரூபாய்க்கும் அதிகமான நன்கொடை வழங்கி உள்ளது.

இந்நிலையில், பில் கேட்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரசை, அமெரிக்கா சிறந்த முறையில் எதிர்க்கொள்ளும் என நினைத்தேன். எனினும், வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அடுத்த, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு, வைரசின் பாதிப்பு, மிக மோசமாக இருக்கும். ஐ.எச்.எம்.இ., எனப்படும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு நிறுவனத்தின் கணிப்புப்படி, இங்கு கூடுதலாக, இரண்டு லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றினால், அதிக உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். கடந்த, 2015ல், இதுபோன்ற தொற்று வரும் என, கணித்தேன். எனினும், அதைவிட மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வைரஸ் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, நானும், தடுப்பூசியை எடுத்துக் கொள்வேன்.
அமெரிக்காவில், புதிதாக ஆட்சி அமைக்க உள்ள பைடன் நிர்வாகம், உண்மையான வல்லுனர்களை நம்ப தயாராக உள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, தெளிவான திட்டங்களை அவர்கள் வகுத்துள்ளனர். எனவே, இந்த பிரச்னையை நாம் நேர்மறையான வழியில் கடந்துவிடுவோம் என நம்புகிறேன். மக்களுக்கு பைடன் நிர்வாகம் முன்னுரிமை வழங்குவதை நினைத்து மகிழ்ச்சிஅடைகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE