சட்டப்படிப்புகளின் தற்போதைய நிலை எப்படி உள்ளது?
சட்டப்படிப்புகளின் தேவை அதிகரித்துள்ளது. சமீபகாலமாக இன்ஜி., பட்டதாரிகள் சட்ட மேற்படிப்புகளை தேர்வு செய்கின்றனர்.இருபது ஆண்டுகளுக்கு முன், எந்த படிப்பும் கிடைக்கவில்லை என்றால் சட்டப்படிப்பு படிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், சமுதாயத்தில் கிடைக்கும் மரியாதை, தன்னம்பிக்கை போன்ற காரணங்களால், இப்போது மாணவர்கள் சட்டப்படிப்புகளை ஆர்வமாக தேர்வு செய்கின்றனர்.சட்டப்படிப்புகளில் மாணவிகள் அதிகரித்து வருவதாக கூறப்படுவது உண்மையா?
நாங்கள் படித்த காலத்தில், ஒரு வகுப்பறையில், நுாற்றுக்கு, 10 மாணவிகள்தான் இருந்தனர். இப்போது, ஒரு வகுப்பில், 60 சதவீத மாணவிகளும்; 40 சதவீத மாணவர்களும் படிக்கின்றனர். சட்டப்படிப்புகளுக்கு முதலில் நுழைவு தேர்வு இருந்தது. இப்போது பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது. பிளஸ் 2வில், மாணவர்களை விட மாணவிகள் அதிக மதிப்பெண் எடுப்பதால், சட்டப்படிப்புகளில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சட்டப்படிப்புக்கான முக்கியத்துவத்தை, பெண்கள் உணர துவங்கி இருப்பதும் ஒரு காரணம். கோவை சட்டக்கல்லுாரியில், கட்டமைப்பு வசதிகள் போதாது என்கின்றனரே மாணவர்கள்?
தற்போது, 10.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலையரங்கம் மற்றும் நுாலகம் கட்டப்பட்டுள்ளது. அதேபோன்று, 4 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.சட்டக்கல்லுாரியில் மாதிரி கோர்ட் உள்ளது. இங்கு மாணவர்கள் படிக்கும்போதே வக்கீல்களாகவும், சாட்சிகளாகவும் மாறி, பயிற்சி எடுக்கின்றனர். இதன் மூலம் மாணவர்களிடம் நல்ல மாற்றங்கள் காணப்படுகின்றன. கோர்ட் தீர்ப்புகள் அனைத்தும், இணையதளத்தில் கிடைப்பதால், மாணவர்களை சரியான திசையில் வழிநடத்தினாலே போதும்.சட்ட கல்லுாரி மாணவர்கள் என்றாலே, தினம் ஒரு போராட்டம் நடத்துபவர்கள்; கலாட்டாவில் ஈடுபடுபவர்கள் என்று கூறப்படுவது உண்மைதானா?
ஒரு காலத்தில் அவ்வாறு இருந்தது; இப்போது அப்படி இல்லை. முன்பு போல் இப்போது பஞ்சாயத்து, ரவுடித்தனம் எல்லாம் பண்ண முடியாது. அடிதடி, போலீஸ் எப்.ஐ.ஆர்., இருந்தால் வக்கீலாகவே முடியாது. வக்கீலுக்கு பதிவு செய்யவும் முடியாது. படித்து முடித்ததும், பார் கவுன்சில் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். படிக்கவே நேரம் போதுமானதாக இருப்பதால், இப்போது எதுவும் நடப்பதில்லை.தற்போது மொத்தம், 1,400 மாணவர்கள் உள்ளனர். இதில், சிலர்தான் தவறான எண்ணத்துடன் இருப்பார்கள். அவர்களை தனிமைப்படுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுப்பதால், மோதல் பிரச்னைகள் முற்றிலும் இல்லை.கல்லுாரியில் அமைதியான சூழல் நிலவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் மத்தியிலும், சட்ட கல்லுாரி மற்றும் மாணவர்கள் மீதான பார்வை மாறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE