சென்னை : ''தி.மு.க.,வுக்கு விவசாயிகள் ஆதரவு இல்லை. தமிழகத்தில், ௧௦௦ நாட்களில், 10 லட்சம் பேரை, பா.ஜ.,வில் உறுப்பினர்களாக சேர்க்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காமராஜ், நேற்று தமிழக பா.ஜ., தலைவர் முருகன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார். பின், முருகன் அளித்த பேட்டி:பா.ஜ., உறுப்பினர் சேர்க்கையை துவக்க உள்ளோம். வேல் யாத்திரைக்கு பின், மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.மக்கள் அளித்த ஆதரவு அடிப்படையில், உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக, சேலத்தில் இன்று, மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ளது. ௧௦௦ நாளில், ௧௦ லட்சம் உறுப்பினர்களை, கட்சியில் சேர்க்க உள்ளோம்.இரண்டு மாதங்களாக, விவசாயிகளை துாண்டிவிட்டு அல்லது விவசாயிகளை தவறாக சித்தரிக்க, தி.மு.க., முயற்சித்தது.
அவர்கள் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. விவசாயிகள் ஆதரவு, அவர்களுக்கு இல்லை. விவசாயிகள் ஆதரவு முழுமையாக, பிரதமருக்கு உள்ளது. வேளாண் திருத்த சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியவை. இதை, விவசாயிகள் அறிந்துள்ளனர். விளைபொருட்களுக்கு, தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் காலம் காலமாக கேட்ட கோரிக்கை, சட்டமாக வந்துள்ளது.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், இதையே தெரிவித்துள்ளனர். தற்போது பிரதமருக்கு, விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த, தி.மு.க., நினைக்கிறது.ரஜினி கட்சி துவக்குவதால், பா.ஜ.,விற்கு பாதிப்பு கிடையாது. இளைஞர்கள், பிரபலங்கள் ஆதரவு, பா.ஜ.,விற்கு உள்ளது.தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை, மக்களுக்கு காட்ட வேண்டிய நிலை உள்ளது. ரஜினி கட்சி ஆரம்பித்த பின், அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து, தேசிய தலைமை தான் முடிவு செய்யும். அ.தி.மு.க., உடனான, தொகுதி பங்கீடு குறித்தும், தேசிய தலைமை முடிவு செய்யும்.இவ்வாறு, முருகன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE