விருதுநகர் ஆர்.டி.ஓ., அலுவலக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, நாமக்கல்லில் வசித்து வரும் வாடகை வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, 6.47 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு, ஒரு மாதத்துக்கு முன், அக்., 1ல், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வேட்டையை துவக்கினர். 117 சவரன் தங்க நகைஅப்போது, வேலுார் மாவட்டம் ராணிப்பேட்டை, மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் பன்னீர்செல்வம், சேலம் மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி., ஆனந்த் உட்பட, 20 பேர் சிக்கினர்.சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜின், 57, காரில், 1.50 லட்சம் ரூபாய் சிக்கியது.இரு தினங்களுக்கு முன், மதுரையில் இருந்து விருதுநகருக்கு காரில் சென்ற, விருதுநகர் ஆர்.டி.ஓ., அலுவலக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கலைச்செல்வியிடம், 117 சவரன் தங்க நகைகள், 24 லட்சத்து, 15 ஆயிரத்து, 780 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, மற்றொரு காரில் சென்ற, மதுரை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சண்முக ஆனந்திடம், 1 லட்சத்து, 43 ஆயிரத்து, 250 ரூபாய்; விருதுநகரைச் சேர்ந்த, இடைத்தரகர், அருள் பிரசாத்திடம், 7,850 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. 'சஸ்பெண்ட்'இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் நல்லிபாளையத்தில், கலைச்செல்வியின் வாடகை வீட்டில், நாமக்கல் லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.காலை, 8:00 மணியில் இருந்து, மறுநாள் அதிகாலை, 3:30 மணி வரை சோதனை நடந்தது.
அப்போது, 6 லட்சத்து, 47 ஆயிரத்து, 700 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். கலைச்செல்வி வீட்டிற்கு, சண்முக ஆனந்த் அடிக்கடி வந்து, தங்கி சென்றதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, சேலம், மகுடஞ்சாவடி, சுண்டமேட்டூரில் உள்ள, கலைச்செல்வி மாமியார் வீட்டிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதற்கு முன், 2019ல், நாமக்கல், ராசிபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரிந்த போது, சண்முக ஆனந்த், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார். அப்போது, இவரது அலுவலகத்தில் இருந்து, 3.50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE