சென்னை : சட்டசபை தேர்தல் வருவதால், பொங்கல் பரிசுடன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
மழை வெள்ள பாதிப்புக்கான நிவாரணமாக, இந்த தொகையை, இரண்டு கோடி குடும்பங்களுக்கு வழங்க, திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.தமிழக அரசு, பொங்கல் பண்டிகையின் போது, ரேஷன் கடைகளில், 2.02 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கம், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இதற்காக, 2,250 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.பொது ஊரடங்குகொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, மார்ச், 25 முதல், பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மக்கள் வீடுகளில் முடங்கியதால், ஏப்ரல் மாதம், அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம், அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை, இலவசமாக வழங்கப்பட்டன. சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய்; அரிசி தவிர்த்து, மற்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. வைரஸ் பரவல் அதிகம் இருந்த, சென்னை மாவட்டம் முழுதும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில், சில பகுதிகளிலும், ஜூன் இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அந்த பகுதிகளில் வசிக்கும், அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும், மீண்டும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ஜூலை வரை, அனைத்து கடைகளிலும், ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
'நிவர், புரெவி' புயல்களால், கடலோர மாவட்டங்களில், நவம்பர் இறுதியிலும், இம்மாத துவக்கத்திலும், கன மழை பெய்தது. 'மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணமாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. ஜெ., மற்றும் கருணாநிதி மறைவுக்கு பின் நடக்கப் போகும் முதல் சட்டசபை தேர்தல். நடிகர் ரஜினியும், புதிய கட்சியை துவக்க உள்ளார். அவகாசம்வரும் தேர்தலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில், அ.தி.மு.க., ஈடுபட்டுள்ளது.
இதற்காக, வாக்காளர்களை கவர, 2021 பொங்கல் பண்டிகைக்கு, பொங்கல் பரிசாக, 2,000 ரூபாய் வழங்க, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை, அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்கும் வகையில், 5.80 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களையும், அரிசி வகைக்கு மாற்ற, அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும், 20ம் தேதி வரை, சர்க்கரை கார்டுதாரர்கள், தங்களின் கார்டை அரிசி கார்டாக மாற்ற, அவகாசம் அளிக்கப்பட்டுஉள்ளது. ஆலோசனைதமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், கொரோனா நிவாரண நிதியாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. அந்த தொகையை, மத்திய அரசு வழங்க ஒப்புக் கொண்டு உள்ளது.
எனவே, மத்திய அரசு அளிக்கும், கொரோனா நிவாரண நிதியை, அப்படியே பொங்கல் பரிசாக, 2,000 ரூபாய் வீதம் வழங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை, இம்மாத இறுதியில் வெளியிட்டு, ஜன., முதல் வாரத்திற்குள், கார்டுதாரர்களுக்கு வழங்கி முடிப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE