திருப்பூர் மாவட்டத்தில், 'ஜாயின்ட் - 1' மாவட்ட பதிவாளர் அலுவலகம் உட்பட பல்வேறு சார் - பதிவாளர் அலுவலகங்களில், 'சைபர் க்ரைம்' செய்து, பல லட்சம் ரூபாய்க்கு முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதிவுத் துறையில், உதவியாளராக பணியாற்றி வரும் சங்கர், பன்னீர் செல்வம் ஆகிய இரண்டு உதவியாளர்கள், இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.எம்.பி.ஏ., பட்டதாரிகளான இருவரும், ஈரோட்டில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் படித்து, குரூப் - 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, நேரடியாக உதவியாளராக பணியில் சேர்ந்து உள்ளனர். இவர்களில் சங்கர், திருப்பூர் ஜாயின்ட் - 1 அலுவலகத்திலும், பன்னீர் செல்வம், தொட்டிபாளையம் சார் - பதிவாளர் அலுவலகத்திலும் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளனர்.
நடந்தது எப்படி?
சொத்து மதிப்பு அதிகமாக உள்ள ஆவணங்களுக்கு, கள ஆய்வுக்குப் பின் கூடுதலாக முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். உதாரணமாக, கடை வீதிக்கு மத்தியில் நீண்ட காலமாக காலியாக உள்ள, 30 சென்ட் இடத்துக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பு என கணக்கிட்டு, அதற்குரிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்தை மட்டுமே முதலில் செலுத்தியிருப்பர்.உண்மையில், அதன் மதிப்பு, 1 கோடி ரூபாய் இருக்கும். சார் - பதிவாளர், உதவி பொறியாளர் நடத்தும் கள ஆய்வுக்குப் பின், அதற்குரிய மதிப்பு நிர்ணயம் செய்யப்படும்.
இதற்கு, குறைவு முத்திரைத் தீர்வு, குறைவு முத்திரைக் கட்டணம் என்று பெயர்.இந்த வித்தியாசத் தொகை, 'ஆன்லைன்' மூலமாக செலுத்தப்பட்டு, அதற்கு ரசீது தரப்படும். அது ஸ்கேன் செய்யப்பட்டு, ஆவணமாக இணைக்கப்படும். இந்த ரசீதை வைத்து தான், தற்போது முறைகேடு நடந்துஉள்ளது.குறைவு முத்திரைத் தீர்வை மற்றும் குறைவு முத்திரைக் கட்டணம் செலுத்திய ஒரிஜினல் ரசீது கள், கிரையம் செய்தவரிடம் ஒப்படைக்கப்படும். ஸ்கேன் செய்யப்பட்ட ரசீது, பதிவுத்துறை ஆவண மாக இருக்கும். இந்த பதிவு நடந்த சில நாட்கள் கழித்து, அந்த ரசீதை ரத்து செய்து, 'டெலிட்' செய்து, ஆன்லைன் 'பேமென்ட்' திரும்பிச் செல்லுமாறு ஏற்பாடு செய்துள்ளனர்.
அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில், சார் - பதிவாளர்களுக்குத் தரப்படும் 'லாக் இன்', 'பாஸ்வேர்டு' ஆகியவற்றைப் பயன்படுத்தி, இவ்வாறு ரசீதுகளை அழித்துஉள்ளனர். அப்போது அந்த, 'பேமென்ட்' அதைச் செலுத்திய பத்திர எழுத்தருக்கே திரும்பச் சென்றுவிடும். அவர்களும் இந்த உதவியாளர்களும், அந்தத் தொகையைப் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். புகார் கொடுக்க தடைதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள பத்திர எழுத்தர்கள் சிலரும், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் ஒரு சில அலுவலர்களும் இந்த முறைகேட்டில் கூட்டணி சேர்ந்துள்ளனர். இதை மாவட்ட பதிவாளர், சார் - பதிவாளர் அந்தஸ்து அலுவலர்கள் கண்டறிந்து, போலீஸ் புகார் கொடுப்பதற்கும் தயாராக இருந்துள்ளனர்.
இதற்காக, உயரதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கோரியுள்ளனர்.ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த விவகாரம் வெளியே வந்தால், எதிர்க்கட்சியினர் பிரச்னையைப் பெரிதாக்குவார் என, ஐ.ஜி., அலுவலக உயரதிகாரிகள் மற்றும் டி.ஐ.ஜி., ஆகியோர் இதற்கு அனுமதி தராமல், தாமதப்படுத்தியதாக புகார் கிளம்பியுள்ளது.போலீசில் புகார் கொடுப்பதைத் தடுத்து, துறைரீதியாக மட்டும் விசாரணை நடத்த அனுமதித்துள்ளனர். அந்த விசாரணையில், ரசீது முறைகேட்டில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.கடந்த ஆண்டில் திருப்பூரில் உயரதிகாரியாகப் பணியாற்றிய ஓர் அதிகாரி, தற்போது கோவை சரக பதிவுத்துறை உயரதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். அவர், இந்த விவகாரம் பற்றி உடனடியாக போலீசில் புகார் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்களை போலீஸ் புகார் கொடுக்க விடாமல், ஐ.ஜி., அலுவலக அதிகாரிகள் தடுத்துள்ளனர்.அரசியல் அழுத்தத்துக்காக, குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு, குற்றத்தைக் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தவர்கள் மீது, இப்போது நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயம் என, பதிவுத்துறை அலுவலர்கள் மத்தியில் பெரும் குமுறல் வெடித்துள்ளது.திருடியவர்களுக்கும், திருட்டைக் கண்டுபிடித்தவர்களுக்கும் ஒரே தண்டனை என்பது பதிவுத்துறையில் மட்டுமே சாத்தியம்!ரூ. 1.40 கோடி முறைகேடு!இந்த ரசீது முறைகேடு விவகாரத்தில், திருப்பூர் ஜாயின்ட் - 1 அலுவலகத்தில், 24 லட்சம், ஜாயின்ட் - 2 அலுவலகத்தில், 30 லட்சம், தொட்டிபாளையத்தில், 18 லட்சம்.நல்லுார், அவினாசி, பல்லடம் மற்றும் காங்கேயம் ஆகிய அலுவலகங்களில் தலா, 10 - 15 லட்சம் என மொத்தம், 1.40 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடிகள் அதிகரிப்பு ஏன்?தமிழகம் முழுதும், 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், 200க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை. உதவியாளர்களே, சார் - பதிவாளர் பொறுப்பில் உள்ளனர். இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: பத்திரப்பதிவு துறையில் சமீப காலமாக, உயர் கல்வி தகுதி உள்ள நபர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு வந்துள்ளனர். இவர்களில் பலர், கணினி செயல்பாடுகளில் திறன் மிக்கவர்களாக உள்ளனர்.'ஆன்லைன்' முறையில் பத்திரங்களை பதிவு செய்யும்போது, அது தொடர்பான ரசீதுகள், வில்லங்க விபரங்களை மாற்றும் அளவுக்கு, இவர்கள் செயல்படுகின்றனர்.
இதனால், சார் - பதிவாளர்களை தாண்டி, உதவியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. விதிகளை பற்றி கவலைப்படாமல், முறைகேடுகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, ரசீது மாற்றம் போன்ற புகார்கள் வருவதால், ஆன்லைன் பதிவு நடைமுறையில், தேவையான மாற்றங்கள் செய்ய வேண்டும்.காலியான இடங்களில், முழுநேர சார் - பதிவாளர்களை நியமிக்க, பதிவுத் துறை தலைமை முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE