மதுரை : 'நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களை அனைத்து கட்சியினரும் நடத்தலாம்' என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து வெளியிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோஜ் இமானுவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு, தமிழகத்தில் அதிக பயிற்சி மையங்கள் உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' இலவச பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.சட்டம், விவசாயம் மற்றும் அது சார்ந்த அறிவியல், கட்டடக் கலை, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட், பேஷன் டிசைனிங், விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகம், கடல்சார் படிப்புகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த உயர்படிப்புகளுக்கு வழிகாட்ட பயிற்சி மையங்கள் இல்லை.
ஆனால், நீட், ஜே.இ.இ.,தேர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்குரிய பயிற்சி மையங்களை, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். நுழைவுத் தேர்வுக்குரிய 'ஆன்லைன்' விபரங்கள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: சில மாணவர்கள், ஒழுங்காக தேவையான இணையதளங்களை பார்ப்பதில்லை. தேவையற்ற இணையதளங்களை பார்க்கின்றனர்.
கவனம் சிதறுகிறது. கஞ்சா, மதுவிற்கு அடிமையாகின்றனர்.வங்கி, இன்சூரன்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் உயர்படிப்பு, வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. அரசு, பொதுத் துறை, தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறித்து அரசும் தெளிவுபடுத்துவதில்லை. ஆனால், வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.ஒரு காலத்தில், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். தற்போது அது குறைந்து விட்டது.அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அதிக தலைவர்கள் உள்ளனர். ஓட்டுக்காக மற்றவைகளுக்கு எல்லாம் குரல் கொடுக்கின்றனர்.
அனைத்துக் கட்சிகளும் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் நடத்தலாம். தலைவர்கள் கூறுவதை தொண்டர்கள் ஏற்பர். அவர்களின் குழந்தைகள் பயிற்சி மையங்களில் சேர வாய்ப்பாக இருக்கும்.இவ்வாறு கருத்து தெரிவித்த நீதிபதிகள், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலர், தமிழக பள்ளிக் கல்வி, உயர்கல்வி செயலர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி ஜன., 6க்கு ஒத்தி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE