- நமது நிருபர் -மதுரையில் நடந்த, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலின் தேர்தல் பிரசார கூட்டத்தில், கொரோனா பரவலை கண்டுகொள்ளாமல், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக பங்கேற்றனர். இது, தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற கோஷத்துடன், முதல் கட்ட பிரசாரத்தை, மதுரையில் நேற்று முன்தினம் துவக்கினார்.கொரோனா பரவல் குறித்து கண்டுகொள்ளாமல், கமலை வரவேற்க, பொது மக்களும், கட்சியினரும் ஏராளமான அளவில் திரண்டனர். கமல் பேசுவதற்கு, போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், அவர் திறந்த வேனில் நின்று, கை அசைத்தபடி வந்தார்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், கமலுக்கு கிடைத்த வரவேற்பை விட, சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கிடைத்த உற்சாகமான வரவேற்பை, கமல் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. கட்சி நிர்வாகிகளிடம், கமல், தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். தொடர்ந்து, இரண்டாவது நாளாக, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், கமல் உற்சாகமாக வலம் வந்தார்.கமல் பிரசாரம் தொடர்பான முக்கிய தகவல்கள், பொது மக்களிடம் கமல் பிரசாரம் ஏற்படுத்திய தாக்கம் போன்ற தகவல்களை, 'ஐபேக்' தரப்பினர் திரட்டி, தி.மு.க., மேலிடத்திற்கு அனுப்பி உள்ளனர்.அதில், கமலுக்கு திரண்ட கூட்டம், தானாக வந்தது என்றும், ஆளும் அரசுக்கு எதிரான ஓட்டுக்களை, கமல் கட்சி கணிசமாக பிரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், ஐபேக் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, கமல் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம் கட்சி, 5 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. கோவை உள்ளிட்ட சில தொகுதிகளில், ஒரு லட்சத்திற்கும் மேலான ஓட்டுக்களை பெற்றது. தற்போது, கமல் முதல்வர் வேட்பாளர் என்பதால், வரும் சட்டசபை தேர்தலில், அவரது கட்சிக்கு கூடுதல் ஓட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது.சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுக்கள், தி.மு.க., கூட்டணிக்கு செல்வதை தடுக்கும் வகையில், கமலின் தேர்தல் பிரசாரம் அமைந்து வருகிறது. பொள்ளாச்சி தொகுதி அல்லது மதுரை மாவட்டத்தில், கமல் போட்டியிட வேண்டும் என, கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். 'சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்' என, கமலும் அறிவித்துள்ளார்.நடிகர் ரஜினி துவக்கும் புதிய கட்சியுடன், கமல் கூட்டணி அமைக்க விரும்புகிறார். ஆனால், ரஜினி எடுக்கிற முடிவை பொறுத்து தான், கூட்டணியா, இல்லையா என்பது தெரிய வரும். கமல் பிரசாரம், தி.மு.க., மேலிடத்திடம், அதிர்வலைகள் ஏற்படுத்தியிருப்பதால், இது தொடர்பாக, வரும், 20ம்தேதி நடைபெறவுள்ள தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், விவாதிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE