சென்னை : தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட ஏழை, எளிய மாணவர்களின் கல்வி செலவு தொகையாக, இந்த கல்வியாண்டுக்கு, 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
வழக்குகல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர் களுக்கான கல்வி கட்டணம், 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப் பட்டது.இதை எதிர்த்தும், 2017 --18 முதல், 2019 -- 20ம் கல்வியாண்டு வரை, கல்வி செலவை மறு நிர்ணயம் செய்ய கோரியும், 2020 -- 21க்கு நியாயமான தொகையை நிர்ணயிக்க கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகள் சங்கம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு, கடந்த முறை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தபோது, '2019 -- 20ம் ஆண்டிற்கான நிலுவை தொகையை, டிச.,14க்குள் செலுத்த கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 'அவ்வாறு செலுத்தாதபட்சத்தில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகி, உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி கல்வி துறை இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆண்டு செலவுஅறிக்கையில், 2019 -- 20ம் ஆண்டுக்கான செலவு தொகையாக, 375.89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு செலுத்துவதற்கான நடைமுறை துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதை பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை, ஜன., 20க்கு தள்ளி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE