கோவை:மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி, கோவையில், 400 பவுண்டரிகள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத் தலைவர் சிவசண்முககுமார் நிருபர்களிடம் கூறியதாவது:பவுண்டரி தொழிலுக்கு மூலப்பொருட்களான, 'பிக் அயர்ன்' உள்ளிட்டவை, குறுகிய காலத்தில், 26 சதவீதத்துக்கும் அதிகமான விலை ஏற்றத்தை கொண்டுள்ளன.
கோவை மாவட்டத்தில், 400 குறு மற்றும் சிறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன.ஏற்கனவே, கொரோனா பாதிப்பில் இருந்து தொழில்கள் மீண்டு வரும் நிலையில், இந்த விலை உயர்வால் பவுண்டரிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கக் கோரி, டிச., 16 (நாளை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.இதனால், நாள் ஒன்றுக்கு, 30 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், தொழிலை நம்பியுள்ள, இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். பவுண்டரி தொழிலை சார்ந்துள்ள, வெட் கிரைண்டர், ஆட்டோமொபைல் போன்ற தொழில்களும் பாதிக்கப்படும். அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தொழில்களை காக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE