ஸ்ரீபெரும்புதுார்:'டிவி' நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக, அவரது குடும்பத்தாரிடம், ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார்.சென்னையை சேர்ந்த, 'டிவி' சீரியல் நடிகை சித்ரா, 29. இம்மாதம், 9ம் தேதி, பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில், ஒரு நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் தாய் விஜயா கொடுத்த அழுத்தம் தான், தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என, போலீசார் கூறினர். இதுதொடர்பாக, பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், சித்ரா தற்கொலை செய்ததாக கூறப்படும் ஓட்டல், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் இருப்பதால், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ, நேற்று விசாரணையை துவக்கினார்.முதல் நாளான நேற்று, சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ், அண்ணன் சரவணன், அக்கா சரஸ்வதி ஆகியோரிடம், தனித்தனியே விசாரித்தார். மூன்று மணி நேரம் நடந்த விசாரணையில், சித்ராவின் கணவர் மற்றும் அவரது வீட்டார், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினரா என்ற கோணத்தில் கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்பட்டன.இன்று சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது குடும்பத்தாரரிடமும், நாளை இரு தரப்பை சேர்ந்த நண்பர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த விசாரணை முடிவுக்கு பின், நடிகை சித்ராவின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சித்ராவின் தாய் விஜயா கூறியதாவது:தற்கொலை செய்து கொள்ளும் முன், என் மகளிடம், 'ஷூட்டிங் முடிந்ததா; எப்போது வருவாய்' என, கேட்டேன். அவளும், வழக்கம் போல பேசினார்.ஒரு தாயால், மகளுக்கு எப்போதும் மன உளைச்சல் ஏற்படாது. சித்ரா தற்கொலைக்கு காரணம் கணவர் ஹேம்நாத் தான். விசாரணை முடிந்த பின், அனைத்தையும் தைரியமாக பேசுவேன்.இவ்வாறு, விஜயா கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE