சென்னை : 'பூத் கமிட்டியில், குறைந்தபட்சம், 25 பெண்களை சேர்க்க வேண்டும்' என, முதல்வர் மற்றும் துணை முதல்வர், கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அ.தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நேற்று, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., ஆகியோர், நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கமிட்டியிலும், குறைந்தது, 75 பேர் நியமிக்கப்பட வேண்டும். அதில், குறைந்தது, 25 பெண்கள் இடம் பெற வேண்டும்.
இளைஞர், இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்.பத்து மாவட்டங்களில், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். அதை, விரைவாக நியமிக்க வேண்டும் என, அவர்கள் அறிவுறுத்தினர்.அதன்பின், முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும், தனித்தனியே அழைத்து, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.அவர்கள் மாவட்டத்தில், பூத் கமிட்டியில் எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை கேட்டறிந்து உள்ளனர். மாலை, 5:15 மணிக்கு துவங்கிய கூட்டம், இரவு, 9:00 மணியை தாண்டியும் தொடர்ந்தது.
'கட்சிக்காரங்க தேவையை கேட்டு நிறைவேற்றுங்க!' கூட்டத்தில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், ''தமிழகத்தில், திராவிட கட்சிகளை, யாராலும் அழிக்க முடியாது. மற்ற மாநிலங்களில் செய்வதை, தமிழகத்தில் செய்ய முடியாது. வரும் தேர்தலில், நம் கட்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, பேசியுள்ளார்.மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசுகையில், ''கட்சிக்காரர்களை கவனிக்காமல் உள்ளோம். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. கட்சியினர் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் கோரிக்கைகளை, அமைச்சர்கள் பிரதிபலன் பார்க்காமல் நிறைவேற்றி கொடுக்க வேண்டும்,'' என, பேசியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE