புதுடில்லி : 'மாணவர்களுக்கு எதிரான அணுகுமுறையை, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது' என, டில்லி உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்கீழ், கடந்த ஆண்டு நடந்த, பிளஸ் 2 பொதுத் தேர்வில், 95.25 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவர், அதைவிட அதிக மதிப்பெண்களைப் பெற, நான்கு பாடங்களில், 'இம்ப்ரூவ்மன்ட்' தேர்வுகளை எழுத முடிவு செய்தார்.அதன்படி, ஒரு ஆண்டு காத்திருந்து, இந்த ஆண்டு, தேர்வுகளை எழுதினார். எனினும், கொரோனா காரணமாக, ரத்து செய்யப்பட்ட, 'பிசினஸ் ஸ்டடீஸ்' தேர்வை மட்டும், அவரால் எழுத முடியவில்லை.
இதையடுத்து, தான் எழுதிய இம்ப்ரூவ்மன்ட் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடக்கோரியும், வழக்கமான தேர்வுகளை எழுதிய மாணவர்களைப் போல், ரத்தான இம்ப்ரூவ்மன்ட் தேர்வுக்கும், மறுமதிப்பீடு திட்டத்தின்கீழ், மதிப்பெண் வழங்கக்கோரியும், டில்லி உயர் நீதிமன்றத்தில், அந்த மாணவர் முறையிட்டார்.இதை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு, அந்த மாணவருக்கு, மறுமதிப்பீடு திட்டத்தின்கீழ் மதிப்பெண்களை வழங்க, சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட்டது.அந்த உத்தரவை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., மேல்முறையீடு செய்தது. இதை, நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி படேல் தலைமையிலான அமர்வு, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை கடுமையாக சாடியது.
அப்போது, பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:மாணவர்களுக்கு எதிரான, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தின் இந்த அணுகு முறை, எங்களுக்கு பிடிக்கவில்லை. நீங்கள், மாணவர்களை உச்ச நீதிமன்றத்திற்கு இழுக்க முயற்சிக்கிறீர்கள்.அவர்கள், படிக்க வேண்டுமா அல்லது நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா? மாணவர்களை எதிரிகள் போல் நடத்துகிறீர்கள்.இம்ரூவ்மன்ட் தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கும், மறுமதிப்பீடு திட்டத்தின்படி மதிப்பெண்களை வழங்கினால், அதில் என்ன பாதிப்பு உள்ளது? இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE