புதுடில்லி : 'ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள, 'அடல்' சுரங்கப்பாதையின், நவீன தொழில்நுட்ப விபரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள, பல்கலை மற்றும் கல்லுாரிகள் ஊக்குவிக்க வேண்டும்' என, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும், 9 கி.மீ., நீள அடல் சுரங்கப் பாதையை, அக்., 3ல் பிரதமர், மோடி திறந்து வைத்தார். உலகிலேயே, 10 ஆயிரம் அடி உயரத்தில், மலையைக் குடைந்து, நவீன தொழில்நுட்பத்தில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது.இது குறித்து, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழு செயலர் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல்கலை துணை வேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்;
அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் மிகப் பெரிய தொழில்நுட்ப அற்புதமாக, அடல் சுரஙகப் பாதை காட்சி அளிக்கிறது. இதன், பொறியியல், வடிவமைப்பு, திட்ட மேலாண்மை, கட்டுமானம் உள்ளிட்ட பல பணிகளில், நவீன நடைமுறைகள் கையாளப்பட்டுள்ளன. இத்தகைய அம்சங்களுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள, அடல் சுரங்கப் பாதையை மாணவர்கள் பார்த்து, அதன் தலைசிறந்த தொழில்நுட்ப விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும். பொறியியல் கல்லுாரிகள், அடல் சுரங்கப் பாதையை மாணவர்கள் காண ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE