புதுடில்லி : ''தகவல் தொழில்நுட்ப துறையைப் போலவே, விண்வெளி துறையிலும், இந்தியர்களின் திறமை, உலக அளவில் பேசப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
விண்வெளி துறையில், பொதுத்துறை நிறுவனங்களுடன், தனியார் நிறுவனங்களும் இணைந்து பணியாற்ற அனுமதி அளிக்க, மத்திய அரசு, கடந்த ஜூன் மாதம் முடிவு செய்தது.இதையடுத்து, விண்வெளித்துறையில், அரசுடன் இணைந்து பணியாற்ற, பல்வேறு நிறுவனங்களும் விண்ணப்பித்து வருகின்றன.விண்வெளி துறையில் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ள, பிரபல நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று உரையாடினார்.அப்போது, அவர் பேசியதாவது:இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும், விண்வெளி ஆராய்ச்சியில், இஸ்ரோவுடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்பை பெறுவர்.
விண்வெளி ஆய்வு தொடர்பான சாதனங்களின் உற்பத்தி கேந்திரமாக, இந்தியா விரைவில் உருவெடுக்கும்.தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதன் வாயிலாக, இத்துறையில் புதிய அத்தியாயம் துவக்கப்பட்டுஉள்ளது.இத்துறையில் தனியார் முதலீடுகள் உருவாக்கப்படுவதன் வாயிலாக, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர்தர வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.தகவல் தொழில்நுட்ப துறையில், இந்தியர்கள் உலக அளவில் புகழ் பெற்றதை போலவே, இத்துறையிலும், விரைவில் பேசப்படுவர் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE