மதுரை : ''வரும் சட்டசபை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன். எங்கு போட்டியிடுவேன் என்பதை தற்போது தெரிவிப்பது சரியாக இருக்காது'' என மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி: மதுரையில் தேர்தல் பிரசார துவக்கம் எழுச்சியாக இருந்தது. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறேன். புரட்சிக்கான துவக்கத்தை அவர்கள் துவக்கியுள்ளனர். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நேர்மையை வைத்து என் ம.நீ.ம.,யை கொண்டு செல்வேன். மற்ற கட்சிகளில் நேர்மை இல்லாததால் தான் அரசியலுக்கு வந்தேன். அந்த கட்சிகளில் குறைந்த எண்ணிக்கையில் நேர்மையானவர்கள் உள்ளனர். அதற்காக நேர்மையானவர்களே இல்லை என சொல்லவில்லை.
நேர்மையாளர்கள் எல்லா கட்சிகளிலும் உள்ளனர்.தமிழக அரசு குறித்த விமர்சனம் இருக்கிறது என்பதை நான் சொல்ல தெரியவேண்டியதில்லை. மக்கள் ஆதரவு எங்களுக்கு அதிகரிக்கிறது என்பதால் ஆட்சியாளர்கள் பதட்டமாகி பிரசாரத்திற்கு தடை விதித்திருக்கலாம்.ரஜினியுடன் கூட்டணிநானும் ரஜினியும் இணைந்தால் வெற்றி படைக்கலாம் என நான் கூறி பல நாட்களாகி விட்டது. அதற்கான நேரம் வர வேண்டும். டிச., 31 வரை பொறுத்திருந்து பிறகு பதில் சொல்வது சரியாக இருக்கும். மூன்றாவது அணியில் இணையும் கட்சிகள் குறித்து தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது. சொல்வதும் நியாயமாக இருக்காது.
கூடிய விரைவில் இதுகுறித்து அறிவிப்பேன்.ஒரு மலை மீது ஏறி நின்று சத்தமிட்டால் தான் அனைவருக்கும் கேட்கும். அதுபோல இந்த மதுரையில் நின்று சத்தமிட்டால் பரமக்குடிக்கு கூட கேட்கும். நான் மதுரை வந்து தான் என் ஊர் பரமக்குடிக்கு செல்ல முடியும். எனவே மதுரை எனக்கு நெருக்கமானது என கூறுவது மிகையாக இருக்காது. வரும் சட்டசபை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன். எங்கு என்பதை தற்போது சொல்வது உசிதமாக(சரியாக) இருக்காது.நாத்திகவாதி என்ற பட்டத்தை நான் ஏற்றுக்கொண்டதே கிடையாது.
ஏனெனில் அது ஆன்மீகவாதிகள் கொடுத்த பட்டம். பகுத்தறிவுவாதி என்பது தான் கரெக்ட். பகுத்து, அறிந்து, புரிந்து கொண்டால் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்து விடும். தனிமனிதனாக என்னுடைய கருத்துக்கள் மக்களுக்கு நான் செய்யும் தொண்டை எந்த விதத்திலும் குறைத்து விடாது. என் பகுத்தறிவு என்பது இதுதானே ஒழிய உங்களுடைய நம்பிக்கைக்கு எதிரான வாதங்களை வைப்பது என் வேலையல்ல.நியாயமில்லாமல் இத்தனை விவசாயிகள் டில்லியில் போராட மாட்டார்கள். ஒட்டுமொத்தமாக விவசாயத்தை நம்பி உள்ளவர்களுக்கு மத்திய விவசாய சட்டங்கள் ஊறு விளைவிக்கும் என கருதுகின்றனர். ம.நீ.ம., பிரதிநிதிகள் டில்லிக்கு சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு வந்துள்ளனர்.
எங்கள் ஆதரவு கண்டிப்பாக டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு உண்டு. 'ஆளவந்தான்' நடிகர் என்பதற்காக வந்த கூட்டம் என யாரை பற்றி கேட்கிறீர்கள். எம்.ஜி.ஆரை பற்றியா. என்னை பற்றியா. நாங்கள் இரண்டு பேரும் ஒரே நடிகர் இனத்தை சேர்ந்தவர்கள் தான். நடிகர் என்பதால் அதை பார்க்க வருவர். அதையும் தாண்டி பார்க்க வருவார்கள். அப்படி பார்த்ததால் தான் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவராக முடிந்தது.ம.நீ.ம.,யை பொறுத்து நேர்மறை, நேர்மை என்பதில் ஒரு மாற்றமும் இல்லை. இந்த கட்சி எல்லாம் எங்கு என கணக்கு சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டோம்.
தற்போது எத்தனை இடங்களில் ஜெயிக்கும் என பேசப்படுகிறது. நாங்கள் வந்ததே ஆளத்தானே. தேர்தல் அறிக்கையில் ஊழல் இல்லாத நிர்வாகத்திற்கு முன்னுரிமை வழங்குவோம். கமிஷன் ராஜ்ஜியம் என சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை லட்சியத்தை நோக்கிய பயணமாக மாற்றுவோம். மேல்மட்டத்திலிருந்து ஊழல் இல்லாத நிலையை உருவாக்குவோம். கீழ்மட்டத்தில் இருப்பவர்களை தண்டிப்பதன் மூலம் லஞ்சத்தை ஒழித்து விட முடியாது. மேல்மட்டத்தில் இருப்பவர்களும் நேர்மையாக இருக்க வேண்டும்.கார்ப்பரேட் கம்பெனிகளே கூடாது என்பது கூட மடமை தான்.
பெரிய தொழில் நிறுவனங்கள் வந்தாக வேண்டும். ஒரு நகரம் மாநகரமாக வேண்டும் என்றால் பெரு நிறுவனங்கள் வர வேண்டும். மதுரையும் அதற்கு உதாரணமான நகரம். அதே வேளையில் பெரிய நிறுவனங்கள் 5 சதவீதம் என்றால் சிறு குறு தொழிலாளர்கள் 5 லட்சமாக இருக்க வேண்டும்.யாருக்கு 'பி டீம்'எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது. எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர்., தான். நான் கமல். எந்த கார்ப்பரேட் என்னை இயக்குகிறது என சொன்னால் நல்லது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை கட்சி துவங்குவது குறித்து யோசிக்கவில்லை. 36 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர்., கூட உனக்கு அரசியல் ஆசை இருக்கிறதா என கேட்டார். அப்ப நான் நினைத்து கூட பார்க்கவில்லை. நானும், ரஜினியும் கடுமையாக உழைத்து செய்த தொழிலில் கூட எங்கள் இருவரையும் போட்டியாக கருதியதில்லை.
மக்கள் பார்வையில் போட்டியாளர்களாக கொலு பொம்மை போல வைத்து விட்டனர். எங்களுக்குள் தெளிவான பார்வை இருந்தது. அதுகுறித்த தனிவழியிருந்தது.ம.நீ.ம., ஆட்சிக்கு வந்தால் நல்லதுக்கான எல்லாவற்றுக்கும் கையெழுத்து இடுவோம். ஒரு கையெழுத்து போட்டால் பற்றாது. தமிழகத்தை நல்வழிபடுத்த சீரமைக்க எத்தனை கையெழுத்து வேண்டுமானாலும் போடுவோம். நான் யாருக்காவது 'பி டீம்' என்றால் அது மகாத்மா காந்தியாருக்காக தான் இருக்கும். இவ்வாறு கமல் பேட்டியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE