திருத்தணி - திருத்தணியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பழக்கடைகளை, போலீஸ் பாதுகாப்புடன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஜே.சி.பி.,இயந்திரத்துடன் அதிரடியாக நேற்று அகற்றினர். அங்கு சாரைப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருத்தணி, கமலா தியேட்டர் அருகே, மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, எட்டு பேர் பழக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பழங்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.இதையடுத்து, போக்குவரத்து போலீசார் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையினர் இணைந்து சாலையை ஆக்கிரமித்து வைத்த பழக்கடைகளை அகற்ற தீர்மானித்தனர்.அதன்படி, நேற்று, திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பிரபாகரன், காவல் உதவி ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்பு, ஜே.சி.பி., இயந்திரத்துடன் வந்து பழக்கடைகளை அகற்றினர்.அப்போது பழ வியாபாரிகள் கடைகளை அகற்றக்கூடாது என, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பழக்கடைகள் அகற்றப்பட்டன.அந்த நேரத்தில், ஒரு பழக்கடையை அகற்றும் போது, அங்கு ஆறரை அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.மரத்தை கட்டி பிடித்த பெண் வியாபாரிபழக்கடைகளை அகற்றிய போது, அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஒரு வேப்ப மரத்தை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற முயன்றனர்.அப்போது பழ வியாபாரம் செய்த பெண் ஒருவர், வேப்ப மரம் எங்கள் குலதெய்வம். இதை வெட்ட விட மாட்டேன் என, மரத்தை கட்டிப் பிடித்துக் கொண்டார்.அதை தொடர்ந்து, போலீசார் அப்பெண்ணை மரத்தில் இருந்து அகற்றிய பின், ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் மரம் அகற்றப்பட்டது. இதனால் நேற்று, திருத்தணியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE