அம்பத்துார் - அம்பத்துாரில், தடகள பயிற்சிக்கு பின், புழல் ஏரியில் குளிக்க சென்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களில் மூவர், அங்குள்ள கொடி தாவரம் மற்றும் சேற்றில் சிக்கி பலியான சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அம்பத்துார் அடுத்த, கள்ளிக்குப்பம், சக்தி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 18; முகப்பேரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.அதே பகுதி, பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 17; சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.வில்லிவாக்கம், திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திலீப்குமார், 19; லயோலா கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.அவர்கள் உட்பட ராஜ், ராகேஷ், சைமன், தாமரை, அபின் தேவசி ஆகியோர், அம்பத்துார், சூரப்பட்டு அருகே உள்ள புத்தகரம் விளையாட்டு மைதானத்தில், தினமும், ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.அதன் பிறகு, களைப்பு தீரவும், உடல் தசை பிடிப்புகளை தளர்த்தவும், புழல் ஏரியில் குளிப்பதும் வழக்கம். நேற்று மதியம், 1:00 மணி அளவில் பயிற்சி முடித்து, வழக்கம் போல், சூரப்பட்டு, மதுராமேட்டுப்பாளையம் அருகே, புழல் ஏரிக்கு சென்று குளித்தனர்.அதில், திலீப்குமார், மணிகண்டன், தமிழ்செல்வன் ஆகியோர், ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது, அவர்கள் அங்குள்ள கொடி தாவரம் மற்றும் சேற்றில் சிக்கி, ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி பலியாகினர். கரை அருகே குளித்த அவரது நண்பர்கள், மூவரையும் காப்பாற்றுமாறு உதவி கோரி கதறினர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உதவிக்கு வந்தும், பருவமழை காரணமாக, அதிகரித்திருந்த ஏரியின் நீர் மட்டத்தால், அவர்களை காப்பாற்ற முடியவில்லை.தகவலறிந்த அம்பத்துார் போலீசார் மற்றும் மாதவரம், செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, மாலை, 4:00 மணி அளவில், மூவரின் உடலையும் மீட்டனர்.இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.தடகள வீரர்கள்!ஏரியில் மூழ்கி பலியான மூவரும், ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள விளையாட்டுகளில், தேசிய அளவில் பங்கேற்றவர்கள். மேலும், எதிர்காலத்தில் வெற்றிகளை பெறும் இலக்குடன், தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE