தேனி : ''தேனியில் அப்பா எம்.எல்.ஏ., மகன் எம்.பி., பிறகு எப்படி பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்,' என மக்கள் நீதி மையம் தலைவர் கமல், துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தை தாக்கிப்பேசினார்.
'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் நேற்று கமல் தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டார். தேனி பழனிச்செட்டிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கட்சி மகளிரணி, இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பெண்கள் பல்வகை திறன்கள் படைத்தவர்கள். அம்மா, மனைவி, பாட்டி, தோழி, தங்கை என பல்வேறு பாத்திரங்களை ஏற்று சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை சாதனையாளர்களாக பார்க்கிறோம். இந்த சாதனையாளர்களுக்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான் 'அம்மா'.
எங்களது கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக குடும்பத்தலைவிகளுக்கு ஊதியம் என்றதும் சிலர் கேலி செய்து கொக்கரித்தார்கள். இதுகுறித்து மேல்நாடுகளில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நீதி மையம் அதனை செயல்படுத்தும். உலகெங்கும் நேர்மையாக, தாயை வணக்கும் ஆண்கள் எல்லோரும் இதனை நினைத்திருப்பார்கள். நாங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

சமபங்கு
1957 ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் லுார்தும்மாள் சைமன் என்ற பெண் அமைச்சர் இருந்தார். அதற்கு பின் 63 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தற்போது 4 பேர் மட்டுமே பெண் அமைச்சர்கள் உள்ளனர். மக்கள் நீதி மையம் ஆட்சியில் பெண்களுக்கு சமபங்கு உண்டு. எங்கள் அமைச்சரவையில் 20 பெண் அமைச்சர்கள், சாதனையாளர்களாக இருப்பார்கள்.
தமிழகத்தில் 3.1 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3.9 கோடி பேர் உள்ளனர். பெண்கள் நினைத்தால் அவர்கள் நினைப்பவர்களை ஆட்சியில் ஆணித்தரமாக உட்கார வைக்க முடியும்.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ''இரண்டரை ஆண்டுகள் பெண் ஆளலாம். இரண்டரை ஆண்டுகள் ஆண் ஆளலாம்'' என தெரிவித்தார். அந்த ஆ(ழ்)ள்வார்களை எல்லாம் பிறகு பார்க்கலாம். அவர் கட்சியில் பொதுச் செயலாளர் பதவியை பெண்களுக்கு கொடுக்காலமே. எங்கள் கட்சியில் பொதுச்செயலாளர்கள் 5 பேர் உள்ளனர். அவர் யாருடைய 'ரிலீசை' மனதில் வைத்து கூறினாரோ தெரியாது.
மக்கள் நீதி மையத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு. பெண்கள், இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால் தேனியில் அப்பா(துணைமுதல்வர்) எம்.எல்.ஏ., மகன் (ரவீந்திரநாத்) எம்.பி., பிறகு எப்படி பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்,'' என்றார். மாவட்ட செயலாளர்கள் ஜோதி ஐயப்பன்(கிழக்கு), கணேஷ்குமார்(மேற்கு), நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE