மாங்காடு - மாங்காடில், சொத்து தகராறில் அக்காவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கையை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கணவரை தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, சந்திரசேகர் நகரைச் சேர்ந்தவர் தெய்வானை, 40; வீட்டில் தனியாக வசித்து வந்தார்.தகராறுநேற்று அதிகாலை, வீட்டில் தெய்வானை கத்தியால் குத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். விசாரணையில், அவரது தங்கை லட்சுமி, கணவருடன் சேர்ந்து கொலை செய்ததும், விசாரணையில் போலீசாரிடம் நாடகமாடியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:தெய்வானைக்கு, கிருஷ்ணா, 17 என்ற மகன் இருந்தார். சில ஆண்டுகளாக தெய்வானை துபாயில் தங்கி வேலை செய்தார். கிருஷ்ணாவை, தன் தங்கை லட்சுமியிடம் ஒப்படைத்தார். மாதந்தோறும் மகன் மற்றும் லட்சுமிக்கு அவர் பணம் அனுப்பி வந்தார். தெய்வானையின் மகன், மூன்று ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் இறந்து விட்டார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், துபாயில் இருந்து திரும்பிய தெய்வானையிடம், லட்சுமியின் கணவர் ரமேஷ் குமார், 30, குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார்.இதனால், தெய்வானை, தங்கை லட்சுமியையும், அவரது கணவரையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். மேலும், 'என் சொத்தில் எந்த பங்கும் இல்லை' என, கூறியுள்ளார்.சொந்த ஊரில், ரமேஷுக்கு சொந்தமான சொத்துக்களை, அவருக்கு தரவிடாமல் தெய்வானை தடுத்ததாகவும் தெரிகிறது.இதனால், ஆத்திரமடைந்த லட்சுமியும், அவரது கணவரும் சேர்ந்து, நேற்று முன்தினம் அதிகாலை, தெய்வானையின் வீட்டிற்கு, பின்பக்க சுவர் வழியாக, ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளனர்.கிடுக்கிப்பிடிசத்தம் வராமல் தடுக்க, தெய்வானையின் வாயை லட்சுமி பொத்திக்கொள்ள, ரமேஷ், கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.பின், இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில், தான் செய்த கொலையை மறைக்க, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, சிலர் தன் வாயில் மதுபானத்தை ஊற்றி தாக்கியதாகவும், அதற்கு, தன் அக்கா தெய்வானை தான் காரணம் என்றும், மாங்காடு காவல் நிலையத்தில், லட்சுமி நேற்று காலை புகார் கொடுத்தார்.நாங்கள் விசாரிப்பதாக கூறி, லட்சுமியின் புகாரை பெற்றுக் கொண்டோம். சிறிது நேரத்தில், தெய்வானையை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என, உறவினர்கள் கூறியதாகவும், அதனால் வீட்டிற்கு சென்று பார்த்தால், அவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்றும், லட்சுமி எங்களுக்கு தகவல் தெரிவித்தார்.சந்தேகத்தால், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், லட்சுமி கொலையை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள அவரது கணவரை தேடி வருகிறோம்.இவ்வாறு, போலீசார் கூறினர்.சொத்து தகராறில், அக்காவை கொலை செய்துவிட்டு, தங்கை நாடகமாடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE