ஆதம்பாக்கம் - ஆதம்பாக்கத்தில், தந்தை, மகன் தீயில் கருகி இறந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆதம்பாக்கம், பாலாஜிநகர், ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் பரிமளம், 47; டிப்ளமா சிவில் இன்ஜினியரிங் படித்தவர்.இவரது மனைவி ராஜபாலம்பிகா, 42; சிவில் இன்ஜினியர். சைதாப்பேட்டையில் உள்ள ஆர்க்கிடெக் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து, ஆதம்பாக்கம், இன்கம்டாக்ஸ் காலனியில், தனியாக வசிக்கிறார். இவர்களது மகன் பாலமுருகன், 10; தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று மாலை, பரிமளம் வீட்டில் இருந்து திடீரென அலறல் சப்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது, உட்பகுதியில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, தந்தை, மகன் இருவரும், ஒருவரை ஒருவர் அணைத்தபடி, தீயில் கருகி இறந்து கிடந்தனர்.அவர்கள் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை யடுத்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.சம்பவம் குறித்து, போலீசார் தரப்பில் கூறியதாவது:புதுச்சேரியைச் சேர்ந்த பரிமளம், கடலுாரைச் சேர்ந்த ராஜபாலாம்பிகா ஆகிய இருவரும், ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தனர். அப்போது, பழக்கம் ஏற்பட்டு, இரு தரப்பு வீட்டாரும் பேசி, 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பரிமளம் சந்தேக புத்தி கொண்டவர். குடிப்பழக்கமும் உண்டு. இதனால், கணவன் - -மனைவிக்குள் கருத்து வேறுபாடு எழுந்து, எட்டு ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்தனர். அவர்களது மகன், காலையில் தந்தையிடமும், இரவில் தாயிடமும் வளர்ந்து வந்துள்ளான். ஊரடங்கு காரணமாக, பரிமளத்திற்கு சரியான வேலை இல்லாததால், மகனை சாக்காக வைத்து, மனைவியிடம் அவ்வப்போது பணம் வாங்கி, வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.இதன் காரணமாக, சில நாட்களாக அதிக மன உளைச்சலில் தவித்து வந்தார். நேற்று காலை, மகனை அழைத்துச் சென்ற பரிமளம், மகனை கடற்கரைக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக ராஜ பாலம்பிகாவிடம் மொபைல் போனில் கூறியுள்ளார்.இந்நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. பரிமளம், தன் மகனை கொலை செய்து, பின், இருவர் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து, அவர் தற்கொலை செய்திருக்கலாம். ஆனால், முழு விசாரணைக்கு பிறகே இது ஊர்ஜிதமாகும்.அவர் திட்டமிட்டே இதை செய்துள்ளார். இறப்பதற்கு முன், வீட்டு உரிமையாளர் மகன் மணிகண்டன் என்பவரிடம் ஒரு, 'கவர்' அளித்துள்ளார். அதில், தன் ஈமச்சடங்கிற்கு, 3,000 ரூபாய் உள்ளதாக எழுதியுள்ளார்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.இந்த இரட்டை மரணம் குறித்து, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE