தர்மபுரி: தொப்பூர் கணவாயில் விபத்தை தடுக்க, அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்க, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கார்த்திகா தலைமையில் ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில், அவர் பேசியதாவது: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் நான்கு வழிச்சாலையில், தாழ்வான வளைவுகள் அதிகமுள்ளது. இச்சாலை வழியாக அதிக எடை, வேகம் மற்றும் கவனக்குறைவால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க, அங்கு கூடுதலாக சோலார் மின்விளக்குகள், பிலிங்கர்ஸ், வளைவுகள் குறித்த அறிவிப்புகள், விழிப்புணர்வு பலகைகள் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை, 'எல் அண்ட் டி' நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த, 40 லட்ச ரூபாய் மதிப்பில், இரு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கவும், அதிவேகம் மற்றும் அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர்பாக, போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் விரைந்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தர்மபுரி முதல், நாமக்கல் வரை, 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிக்கு முன்பாக, சுங்கச்சாவடி, வெள்ளக்கல், கட்டமேடு வழியாக, தொப்பூர் வரை, தற்போதுள்ள சாலையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விபத்தை குறைக்க வளைவாக உள்ள இச்சாலையை நேராக செல்லும் வகையில், புதிய பாதை அமைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட துறையினர் விரிவான அறிக்கை பெற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு, முன்மொழிவுகளை அனுப்ப வேண்டும். இது குறித்து அரசுக்கு, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யும். இவ்வாறு அவர் பேசினார். இதில், எஸ்.பி., பிரவேஸ்குமார், டி.ஆர்.ஓ., ராமமூர்த்தி, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் தனசேகரன், கோட்ட பொறியாளர் குலோத்துங்கன், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் வரதராஜன், ஆர்.டி.ஓ., தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE