ஓசூர்: ஓசூரில், 2 கோடி ரூபாய் கேட்டு, தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்திய, ஆறு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். மேலும், இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பீட்டர் லூயிஸ், 45; ஓசூரிலுள்ள, தனியார் நிறுவனத்தில், மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த, 2ல் மாலை, நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு, காரில் திரும்பிய அவரை, ஓசூரில், கத்தியை காட்டி மிரட்டி மர்மகும்பல் கடத்தியது. இது குறித்து, அவரது மனைவி சுகன்யா பிரின்சி புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மர்ம கும்பல், கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலத்துக்கு அருகே, காருடன் பீட்டர் லூயிசை இறக்கி விட்டு தப்பியது. விசாரணையில், 2 கோடி ரூபாய் பணம் கேட்டு, பீட்டர் லூயிஸ் கடத்தப்பட்டது தெரிந்தது. மேலும், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த அமரேஷ், 28, முகலூரை சேர்ந்த தியாகராஜ், 32, குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த குருபிரசாத், 26, சினிகிரிப்பள்ளியை சேர்ந்த வினோத்குமார், 30, கிருஷ்ணகிரியை சேர்ந்த நதீம் அகமது, 22, பவித்ரன், 20, சந்தனப்பள்ளியை சேர்ந்த அருண்குமார், 20, கிருஷ்ணமூர்த்தி, 20, ஆகிய எட்டு பேர், பீட்டர் லூயிசை கடத்தியது தெரிந்தது. இதில், அருண்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அமரேஷ், தியாகராஜ், குருபிரசாத், வினோத்குமார், நதீம் அகமது, பவித்ரன் ஆகிய ஆறு பேரை, சிப்காட் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE