ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கொடுமுடி, சாலைபுதூர், சிவகிரி, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் உட்பட பல்வேறு பகுதியில், மரவள்ளி கிழங்கு சாகுபடியாகிறது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேகோ ஆலைகள், ஒரு டன், 3,500 முதல், 5,300 ரூபாய் விலையில் கொள்முதல் செய்கின்றனர். கடந்த மாதம் கடுமையாக விலை குறைந்ததால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். விவசாயிகள் கோரிக்கைப்படி, ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமையில், விவசாயிகள், வியாபாரிகள், ஆலை நிர்வாகத்தினர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம், நேற்று நடந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு,குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: மரவள்ளி கிழங்கு விலையை, பாயிண்ட் அடிப்படையில் நிர்ணயிப்பர். தற்போது பாயிண்ட், 220 ரூபாய் வீதம், ஒரு டன், 5,300 ரூபாய்க்குள் கொள்முதலாகிறது. முத்தரப்பு கூட்டத்தில், பாயிண்ட், 250க்கு, ஒரு டன், 6,000 ரூபாய் என விலை வழங்க முடிவு செய்தனர். இந்த விலையை ஆலை நிர்வாகத்தினர் ஏற்றனர். மரவள்ளி கிழங்கு எடை போடும் இடத்திலேயே, வேளாண் அதிகாரிகள் முன்னிலையில், இயந்திரம் மூலம், தரத்தை அறிந்து விலையை நிர்ணயிக்க ஒப்புக் கொண்டனர். முன்பு, விலை நிர்ணயம், எடை போடுதல், தரம் நிர்ணயிப்பதில் குளறுபடி தொடர்ந்தது. இதை தவிர்க்க யோசனை தெரிவிக்கப்பட்டது. தவிர, வெளிநாடுகளில் இருந்து ஸ்டார்ச் இறக்குமதி செய்வதை தடை செய்யவும், மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு வாரியம் அமைக்கவும், கம்போடியாவில் இருந்து இறக்குமதியாகும் மாவுக்கு, 100 சதவீதம் வரி விதிக்கவும் கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைப்பதாக, கலெக்டர் உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE