அரசுத்துறைகளில், பணியாற்றும் லஞ்ச பேர் வழிகளிடம் இருந்து, கட்டு கட்டாக பணம், ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்து, புதிய வழியில் நடந்த வசூல் வேட்டைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 'செக்' வைத்துள்ளனர். வசூல் அதிகாரிகளுக்கு கார், வீடு ஆகியவற்றை வாடகைக்கு வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு, ஒரு மாதத்துக்கு முன்பாக அக்.,1 முதல், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேட்டையை துவக்கினர். 40 தனிப்படையினர், களம் இறங்கினர். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் பன்னீர்செல்வம், சேலம் மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி., ஆனந்த் உட்பட, 20 பேர் தீபாவளிக்கு முன்னர் வரை லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கினர். தீபாவளி பண்டிகைக்கு பின் லஞ்ச ஒழிப்புத்துறையின் கண்கள் மூடப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு, அரசுத்துறையில் பணியாற்றிய லஞ்ச பேர் வழிகள் மத்தியில் நிலவியது. ஆனால், தனிப்படையினர், 'வேட்டை'யை தொடர லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஜெயந்த் முரளி உத்தரவிட்டுள்ளார். மிக அதிகமாக லஞ்ச பணம் நடமாட்டம் உள்ள பத்திரபதிவுத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பஞ்சாயத்து யூனியன்கள் உட்பட, 54 துறை அதிகாரிகள், அலுவலகங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின், 'கண்காணிப்பு' தொடர்ந்தது. அதே சமயம் லஞ்சம் வாங்கி பழக்கப்பட்ட, அரசுதுறையினர், தாங்கள் வாங்கும் லஞ்ச பணத்தை மறைத்து வைக்க, புதிய வழியை கையாண்டனர். கார்கள், வாடகை வீடுகள், ஓட்டல் அறைகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் லஞ்ச பணம், நகைகளை பதுக்க துவங்கினர். இதை மோப்பம் பிடித்த, லஞ்ச ஒழிப்புத்துறையினர், கார்களிலும் சோதனையை துவக்கியது.
சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ்,57; காரில், 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியின் காரில் இருந்து, 24 லட்சம் ரூபாய், 117 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகானந்தம் காரிலும் லஞ்ச பணம் சிக்கியது. தொடர்ந்து, நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள சண்முகானந்தத்தின் வீட்டில் சோதனை மேற் கொண்டதில், அவர் வீட்டின் எதிரே உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து பணம், நகை பதுக்கியது தெரிய வந்துள்ளது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது: இது வரை நடந்த வேட்டைகளில், 50 அதிகாரிகள் சிக்கி உள்ளனர். லஞ்ச அதிகாரிகளின் வசூலுக்கு துணை போகும் வகையில் அவர்களுக்கு வாடகைக்கு வீடு, கார், ஓட்டல்களில் அறைகள், உறவினர்கள், நண்பர்கள் வீடு வழங்கி உதவுவது தெரிய வந்ததால், இனி அவர்களையும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க, சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வசூல் வேட்டையில் ஈடுபடுவோருக்கு எந்த வகையிலும், பொதுமக்கள் உதவ வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE