மா றிவரும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கவும், கட்டுமான துறையினரின் கோரிக்கைகள் ஏராளம். வேலைவாய்ப்பு அதிகம் தரும் இத்துறை வளர்ச்சிக்கு அங்கீகாரம் போன்றவற்றில் மாற்றம் கொண்டுவர எதிபார்ப்பு அதிகரித்துள்ளது.சென்னைக்கு அடுத்து கட்டுமானத்தில் அதீத வளர்ச்சிபெற்ற நகரமாக கோவை விளங்கி வருகிறது. நகரங்களில் மட்டுமின்றி, புறநகரங்களிலும் லே - அவுட்கள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றன.கோவையை பொறுத்தவரை உள்ளூர் நிறுவனங்கள் மட்டுமின்றி, ஏராளமான வெளியூர் நிறுவனங்களும் கட்டுமான பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன. இத்தொழிலில் நேரடியாக மூன்று லட்சம் பேரும், மறைமுகமாக, 1.5 லட்சம் பேரும் பணிபுரிந்து வந்தனர்.கொரோனாவால் முடங்கிப்போன துறைகளில் கட்டுமானமும் ஒன்று. படிப்படியாக மீண்டுவரும் இச்சூழலில், சொந்த ஊரில் இருந்து கோவை திரும்பாத வடமாநிலத்தவரால், கட்டுமானத்தில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து, கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு கட்டுமான துறையினருக்கு சுமை அதிகரித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் கணேஷ் கூறியதாவது:கொரோனாவால் முடங்கிய கட்டுமான துறை, இதுவரை முழுமையாக நிமிரவில்லை. கட்டடம் கட்டும் கம்பியின் விலை, இரு மாதங்களுக்கு முன், கிலோவுக்கு, 45 முதல், 55 ரூபாய் வரை இருந்தது. கம்பியின் விற்பனையும் சரிவர நடைபெறாமல் மந்த நிலையிலேயே இருந்தது.இருப்பினும், எந்தவொரு முன்னறிவிப்பும், காரணமும் இல்லாமல் தற்போது கிலோ, 55 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது, ஒரு டன் கம்பி (1,000 கிலோ) விலை, 15 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், ஏற்கனவே கட்டுமான ஒப்பந்தம் செய்து பணியை தொடர்ந்து கொண்டிருக்கும் பொறியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.மக்கள், தங்களுக்கான கனவு இல்லத்தை கட்ட முடியாமல் திணறுகின்றனர். ஏற்கனவே சிமென்ட் மூட்டை விலை, 50 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது கட்டுமான கம்பி விலையும் உயர்ந்தால் கட்டுமான சதுரடி விலை சுமார், 20 சதவீதம் உயர்த்தப்படும்.தனியார் கட்டுமானங்கள் மட்டுமின்றி, அரசுக்கான பணிகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்படும். விலையை கட்டுப்படுத்தவில்லையேல் கட்டுமானத்துறை மிகவும் பாதிக்கப்படும். தமிழக அரசு உடனே தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுத்து, விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE