சென்னை: சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் கட்சிக்கு ‛டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்படாததற்கு அக்கட்சி தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தோ்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்டு அதன்பின் அதனை இழந்த கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. சட்டசபைத் தோ்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில் வேட்பாளா்களை நிறுத்தும் கட்சிக்கு, பட்டியலில் உள்ள சின்னங்களில் ஒன்று பொது சின்னமாக வழங்கப்படும். சின்னங்களின் பட்டியலில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பத்து சின்னங்களைத் தோ்ந்தெடுத்து தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அதிலிருந்து பொது சின்னமாக சம்பந்தப்பட்ட கட்சிக்கு தோ்தல் ஆணையம் அளிக்கும்.

அதன்படி, தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், கடந்த தேர்தலில் வழங்கிய சின்னத்தையே இம்முறையும் வழங்குமாறு சில கட்சிகள் கோரிக்கை வைத்தன. நாம் தமிழர் கட்சி, அமமுக., போன்ற கட்சிகளுக்கு கடந்த தேர்தலைப்போல, இம்முறையும் விவசாயி சின்னம், பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கிடப்பட்டுள்ளன. ஆனால் கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மட்டும் ‛டார்ச் லைட்' சின்னத்தை வழங்க மறுத்துள்ளது. புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அக்கட்சிக்கு மறுத்துள்ளது.
மக்கள் நீதி மையம் கோரிய டார்ச் லைட் சின்னமானது, எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் என தனது அதிருப்தியை கமல் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE