தஞ்சாவூர் : தஞ்சையை ஆண்ட சரபோஜி உள்ளிட்ட மன்னர்கள், ராணியரின் சமாதிகளை, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி துவங்கியது.
மாவீரன் சத்ரபதி சிவாஜியின் தந்தை ஷாஜியின் இரண்டாம் தாரத்தின் மகன் பான்ஸ்லே வம்சத்து எக்கோஜி முதல், 11 மராட்டிய மன்னர்கள், 175 ஆண்டுகள் தஞ்சையை ஆட்சி செய்தனர். இதில், எட்டாவது மன்னராக இருந்த பிரதாப சிம்மன், 1763ல் இறந்த நிலையில், கைலாஷ் மஹால் ராஜாகோரியில், உடல் தகனம் செய்யப்பட்டது.பின், மரபுப்படி, 50 அடி உயர விமானத்துடன் பள்ளிப்படை எனும் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் உச்சியில், சம்ஹார மூர்த்தி போன்ற சிவன் வடிலான சுதை உள்ளது. பிரதாப சிம்மனுக்கு, ஐந்து மனைவியர், ஏழு அபிமான பெண்களும் இருந்துள்ளனர்.இதில், மூன்றாவது மனைவி சாகேபும், ஐந்தாவது மனைவி சக்குவார் பாயிசாகேபும், பிரதாப சிம்மனுடன் உடன்கட்டை ஏறினர். அவர்களுக்கும், மன்னனின் நினைவிடத்தில், இருபுறமும் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டன.
இதேபோன்று மன்னர் இரண்டாம் சரபோஜி சமாதியும், கடைசியாக தஞ்சையை ஆண்ட சிவாஜி, அவரது, 11 மனைவியரின் நினைவிடங்கள், கலை நுட்பத்துடன் கோவில் வடிவில் அமைக்கப்பட்டிருந்தன.பராமரிப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்பாலும் மன்னர்களின் சமாதிகள் வீடுகளாய் மாறி போனது.இப்பகுதியை புனரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், ஜெயமாலா ராணி தொண்டு மற்றும் அறக்கட்டளை சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், மன்னர்கள், ராணியரின் சமாதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை, கலெக்டர் கோவிந்தராவ் நேற்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இதில், சரபோஜி குடும்பத்தைச் சேர்ந்த ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE