கரூர்: மழை காரணமாக கொத்தமல்லி தழை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், விலை மளமளவென குறைய துவங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை காலத்தில், மழை இல்லாததால் கொத்தமல்லி தழை, கிலோ, 75 முதல், 100 ரூபாய் வரை விற்றது. இதனால், காய்கறி கடைகள், உழவர் சந்தைகள், மார்க்கெட்டுக்களில், கொத்தமல்லி தழை இலவசமாக வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த, செப்டம்பர் மாதம் முதல் மழை பெய்ய துவங்கியதால், கரூர் மாவட்டத்தில் மனாவாரி சாகுபடி நிலங்களில் விளைச்சல் அதிகரித்தது. புதிய கொத்தமல்லி தழை, மூட்டை மூட்டையாக கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் வர துவங்கியுள்ளது. இதனால், விலை குறைய துவங்கியுள்ளது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், கொத்தமல்லி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக நல்ல விளைச்சலடைந்த, கொத்தமல்லி அறுவடை துவங்கியுள்ளது. மேலும், தேனி மாவட்டம் சின்னமனூர், கம்பம், திண்டுக்கல் மாவட்டம், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் கொத்தமல்லி தழை வர துவங்கியுள்ளது. இதனால், கிலோ, 75 முதல், 100 ரூபாய் வரை கொத்தமல்லி தற்போது, 20 முதல், 30 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், வரும் தை மாதம் வரை, கொத்தமல்லி தழை விலை உயர வாய்ப்பில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE