சென்னை : எதிர்வரும் தேர்தலால் தமிழகத்தில் அரசியல் களங்கள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. ரஜினி கட்சிக்கு ‛மக்கள் சேவை கட்சி' என்ற பெயரும், ‛ஆட்டோ' சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல், தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு மற்றும் திமுக.,வின் ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தமிழகம் மீட்போம் ஆகியவைகளை கொண்டு டுவிட்டரில் இன்று(டிச., 15) டிரெண்ட் செய்கின்றனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த முறை நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் தேர்தலில் களமிறங்குகின்றனர். இதனால் ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மையத்தின் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் ஆரம்பித்துவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்தாலும் அவரது மேற்பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் வேலை உள்ளிட்ட பிற பணிகளில் உள்ளனர்.
இதனிடையே கடந்த தேர்தலில் வழங்கிய சின்னத்தையே இம்முறையும் வழங்குமாறு தமிழகத்தில் சில கட்சிகள் கோரிக்கை வைத்தன. நாம் தமிழர் கட்சி, அமமுக., போன்ற கட்சிகளுக்கு கடந்த தேர்தலைப்போல, இம்முறையும் விவசாயி சின்னம், பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கிடப்பட்டுள்ளன. ஆனால் கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மட்டும் ‛டார்ச் லைட்' சின்னத்தை வழங்க மறுத்துள்ளது. அதேசமயம் ரஜினி கட்சிக்கு ‛மக்கள் சேவை கட்சி' என்ற பெயரும், ‛ஆட்டோ' சின்னமும்' ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூகவலைதளங்களில் டிரெண்ட்
தமிழக கட்சியினர் இடையே சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியானது முதல் அக்கட்சியை சேர்ந்தவர்கள் அதை சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்கின்றனர்.
மக்கள் சேவை கட்சி
ரஜினி கட்சிக்கு ‛மக்கள் சேவை கட்சி' என்ற பெயரும், ஆட்டோ சின்னமும் வழங்கியதை அவரது ரசிகர்கள் வரவேற்று சமூகவலைதளங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் சினிமா பயணத்தில் முக்கியமான படம் பாட்ஷா. அதில் அவர் ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடித்தார். இப்போது ஆட்டோவே கட்சியின் சின்னமாக அவர்களுக்கு கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் பாட்ஷா படத்தில் ரஜினி ஆட்டோ உடன் இருக்கும் போட்டோவையும், 'நான் ஆட்டோக்காரன்..' பாடலின் சில வரிகளையும் குறிப்பிட்டு டிரெண்ட் செய்கின்றனர். இதனால் #MakkalSevaiKatchi என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

தமிழகம்_மீட்போம்
முக்கிய எதிர்கட்சியான திமுக.,வும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், தமிழகம்_மீட்போம் என்ற கொள்கையை முன்னெடுத்து தேர்தலில் களம் காண்கிறார். தமிழக அரசின் தற்போதைய நிலை, அவர்கள் செய்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி இதிலிருந்து தமிழகத்தை மீட்போம் என முழங்கி வருகிறார். இதனால் இதை வைத்து டுவிட்டரில் #தமிழகம்_மீட்போம் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.

வெற்றி சின்னம் குக்கர்
இதேப்போன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதை அக்கட்சியினர் வரவேற்று டிரெண்ட் செய்கின்றனர். டிடிவி தினகரன் போட்டோவையும், அவர் குக்கர் உடன் இருக்கும் வீடியோ, போட்டோக்களை பதிவிட்டு, #வெற்றி சின்னம் குக்கர் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் செய்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE