கட்ச்: வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவசாயிகளிடம் பொய்யான தகவலை சொல்லி பயமுறுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.121 கோடியில் அமையும் இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்த முடியும்.
பின்னர் இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: கட்ச் பகுதி அதிவேகமாக வளர்ச்சி பெறுகிறது. கட்ச் பகுதி மக்கள் ஏமாற்றத்தை நம்பிக்கையாக மாற்றியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை எவ்வளவு பெரிய பூகம்பம் வந்தாலும் அசைக்க முடியாது. பூகம்பத்திற்கு பிறகு, மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இப்பகுதியை உயரத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை குஜராத் அறிமுகப்படுத்தியது. சூரிய எரிசக்தி திட்டங்களை பலப்படுத்த குஜராத் பாடுபட்டது.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும். விவசாயிகளுக்கு உதவி செய்ய நாம் எப்போதும் தயாராக உள்ளோம். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் ஆசி நமக்க உள்ளது. அவர்களின் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிள் தவறான தகவலை பரப்பி வருகின்றன. பொய் சொல்லி, விவசாயிகளை எதிர்க்கட்சிகள் பயமுறுத்துகின்றன. பொய் பரப்புபவர்களுக்கு விவசாயிகள் உரிய முறையில் பதிலடி கொடுப்பார்கள். வேளாண் சீர்திருத்தங்களை தங்கள் ஆட்சியின் போது ஆதரித்த எதிர்க்கட்சிகள் தற்போது விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன. தங்கள் ஆட்சியில் வேளாண் சீர்திருத்தங்களை கொண்டு வராத எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்க்கின்றன. வேளாண் சட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE