எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, பார்லிமென்டின் இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் நவ., - டிச., மாதங்களில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்காக பார்லிமென்ட் கூட்டப்படும்.இந்த முறை, அதற்கான எந்தவொரு அறிகுறிகளும் தென்படாமல் இருந்தது.இந்நிலையில் தான், விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதையொட்டி, பார்லிமென்டை கூட்ட வேண்டுமென்ற கோரிக்கையும், எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்தது.
வலியுறுத்தல்
இதையடுத்து, குளிர்கால கூட்டத்தொடர் குறித்த எதிர்பார்ப்பு கிளம்பியது. லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தன் கோரிக்கையை வலியுறுத்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.'விவசாயிகள் பிரச்னை, சீனா ஊடுருவல், பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியிருப்பதால், குளிர்கால கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வேண்டும்' என, அதில் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கடிதம் எழுதிஉள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: குளிர்காலம் என்பதால், கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளது. டில்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.தடுப்பூசி விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலை குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேசினேன். அவர்களும், தற்போதைய நிலைமை குறித்து கவலை தெரிவித்தனர். குளிர்கால கூட்டத்தொடரைத் தவிர்த்து, நேராக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தலாம் என்றும், அதையும் வெகு சீக்கிரமாக நடத்த நடவடிக்கைகள் எடுப்பது சரி என்றும் அரசு விரும்புகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஆலோசனை
மத்திய அரசு தரப்பில், குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை; என்றாலும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் எழுதிய கடிதம், கூட்டத்தொடர் நடக்காது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: அரசின் முடிவு ஒருதலைப்பட்சமானது. கூட்டத்தொடரை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதுபோல ஆலோசனைகள் நடந்ததாக தெரியவில்லை. ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாதிடம் கூட ஆலோசனை நடத்தாமல், தன்னிச்சையாக இம்முடிவை எடுத்துள்ளது அரசு. வழக்கம் போல் இந்த விஷயத்திலும், அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நழுவப் பார்க்கிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ''கடும் குளிரில் விவசாயிகள் போராடுகின்றனர். நாட்டின் கவுரவத்துக்கு இது அழகல்ல.''இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காகவே, குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட வேண்டு மென்று வலியுறுத்தினோம். அரசு கேட்பதாக தெரியவில்லை,'' என்றார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE